2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சம்பியனாகியது அத்லெட்டிகோ மட்ரிட்

Editorial   / 2018 மே 17 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய இரண்டாம் தர கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான யூரோப்பா லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் சம்பியனாகியது.

பிரான்ஸில் லயோவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய் அணியை வென்றதன் மூலமாகவே அத்லெட்டிகோ மட்ரிட் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்தில், மர்ஸெய் அணியின் தலைவர் டிமித்ரி பயேட், வலெரெ ஜெர்மைனிடம் கொடுத்த பந்தை அவர் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தியபோதும் கோல் கம்பத்துக்கு வெளியேயே பந்து சென்றதுடன், பின்னர் மர்ஸெய் அணியின் அடில் றமி உதைந்த உதையொன்றும் கோல் கம்பத்துக்கு வெளியேயே சென்றிருந்தது.

இந்நிலையில், மர்ஸெய் அணியின் கோல் காப்பாளர் ஸ்டீவ் மன்டனா கொடுத்த பந்தை அவ்வணியின் ஸம்போ அன்குய்ஸா கட்டுப்படுத்த தவற, இச்சந்தர்பத்தை பயன்படுத்தி, பந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்த அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் தலைவர் கபி, அதை சக வீரர் அன்டோனி கிறீஸ்மன்னிடம் வழங்க, அவர் அதை போட்டியின் 21ஆவது நிமிடத்தில் கோலாக்க அத்லெட்டிகோ மட்ரிட் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, போட்டியின் 30ஆவது நிமிடளவில் தசைக் காயத்தால் அவதிப்பட்ட டிமித்ரி பயேட் மக்ஸிம் லொபேஸால் பிரதியீடு செய்யப்பட்டார். பின்னர் போட்டியின் இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில், சக வீரர் கொகேயிடமிருந்து பந்தைப் பெற்ற அன்டோனி கிறீஸ்மன் மீண்டுமொரு முறை கோலைப் பெற்று தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இந்நிலையில், மாற்று வீரராகக் களமிறங்கிய மர்ஸெய் அணியின் கொஸ்டாஸ் மிட்றோகுளூ தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. பின்னர் போட்டி முடிவடையும் தறுவாயில் கபி ஒரு கோலைப் பெற இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்று சம்பியனாகியிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .