Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 24 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி. சங்கீதன்
ஆசிய ஆணழகன் வெற்றிக் கனவுடன் மலையக இளைஞன் ராஜகுமாரன் இன்று (24) அதிகாலை சீனா நோக்கி பயணமானான்.
மலையகத்தின் பெருமையை உலகறியச் செய்ய துடித்துக்கொண்டிருக்கும் ஓர் இளைஞனான மாதவன் ராஜகுமாரன், பெயரில் ராஜகுமாரனாக இருந்தாலும் ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலையுடன் தனது கல்வியைத் தொடர்ந்து மலையக மக்கள் சரித்திரத்தில் என்றுமே நினைத்துப் பார்க்க முடியாத ஆணழகன் போட்டியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இன்று மலையகத்துக்கும் எங்களுடைய நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தான் பங்குபற்றிய போட்டிகளிலெல்லாம் தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறார்.
ராஜகுமாரன் பாடசாலை காலத்தில் அதாவது கல்விப் பொதுதராதர சாதாரண தரம் படிக்கின்ற தனது 16 வயதில் 2015ஆம் ஆண்டு மத்திய மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலைகளுகிடையிலான போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் திறந்த மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை கனிஷ்ட சம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். அதிலும் 23 வயதுக்குட்பட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். அதேபோல 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 55 கிலோ கிராம் எடைப் பிரிவில், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட மிஸ்டர் ஸ்ரீலங்கா திறந்த மட்ட போட்டியில், கடந்தாண்டு அகில இலங்கை தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
மேற்குறித்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றபொழுது தானும் வெளிநாடுகளிலே நடைபெறுகின்ற போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்ற ஒரு கனவோடு தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது கடந்தாண்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ராஜகுமாரனுக்கு கிடைத்தது. அங்கு 60 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை ராஜகுமாரன் பெற்றார்.
அந்தவகையில் ராஜகுமாரனுடைய அடுத்த கனவாக, சீனாவின் ஹர்பினில் நடைபெறுகின்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோ கிராம் எடை பிரிவு, 23 வயதுக்குட்பட்ட கனிஷ்ட சம்பியன்ஷிப் ஆகிய இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுவதே ஆகும்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ராஜகுமாரன், “சாதிப்பதற்கு வறுமை ஒரு பொருட்டல்ல என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் ஆரம்ப காலத்தில் இந்த ஆணழகன் போட்டிக்கு வந்த பொழுது தினக்கூலியாக தோட்டங்களில் சென்று வேலை செய்து இருக்கின்றேன். என்னுடைய தாயாரும் தந்தையும் வழங்கிய ஒத்துழைப்பும் தான் இந்த அளவுக்குகு நான் வளர்ந்து வருவதற்கு காரணமாக இருந்திருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் உரிய அளவில் அனுசரணையாளர்கள் கிடைப்பார்களானால் நிச்சயமாக என்னால் இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும்” எனக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago