2024 மே 17, வெள்ளிக்கிழமை

செம தடவு தடவிய தோனி

Editorial   / 2024 மே 02 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றிற்கு முதல் 2 இடங்களிலிருந்து முன்னேறும் என்பது அறிவிக்கப்படாத முன்முடிவு, ஏனெனில் அதற்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன.

3-ல் வென்று 16 புள்ளிகளுடன் முன்னேறி விடும் என்பதற்கான வாய்ப்புகளே அதிகம், இருப்பினும் புதன்கிழமை  அவர்களின் ஆட்டம் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணி ஆடியது போல் தெரியவில்லை. காரணம் பஞ்சாப் கிங்ஸின் ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹார் வீசிய 8 ஓவர்களை சிஎஸ்கே கையாண்ட விதம் எந்த ஒரு திட்டமிடலும் அற்ற வெட்டித்தனமான கிரிக்கெட்டாக அமைந்ததே.

மும்பை இந்தியன்ஸுக்குப் பிறகு சிஎஸ்கேவை 5 முறை தொடர்ந்து தோற்கடித்த அணியாக பஞ்சாப் கிங்ஸ் திகழ்கிறது. தோனி என்னும் ஒற்றை மனிதனின் ஹீரோ ஒர்ஷிப் அணியாகக் குறுகிவிட்ட சிஎஸ்கே-வின் ‘உண்மை’யான திறமைக்கு புதன்கிழமை ஆட்டமே சாட்சியம்.

கடுமையான வெயில் தினமான புதன்கிழமை (01)  சாம் கரன் மிகச்சரியாக டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். லெக் பிரேக் கூக்ளி பவுலர் ராகுல் சஹார் மற்றும் இடது கை ஸ்பின்னர் ஹர்ப்ரீத் ப்ரார் தங்களது 8 ஓவர்களில் சிஎஸ்கேவை கசக்கிப் பிழிந்து விட்டனர். 48 பந்துகளில் இருவரும் 19 டாட் பால்களை வீசியதோடு ஒரு பவுண்டரியைக் கூட அடிக்க விடவில்லை இருவரும் 33 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிஎஸ்கேவை மூச்சுத் திணறடித்தனர். மேலும் பவுலிங்கின் போது தீபக் சஹார் வழக்கம் போல் காயமடைந்து வெளியேறியதும் பெரிய பின்னடைவானது.

பவர் ப்ளே முடிந்தவுடனேயே ப்ராரும், ராகுல் சஹாரும் பந்து வீசத் தொடங்கி 7 ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசினர். இந்தக் காலக்கட்டத்தில் சென்னை அணி முடங்கியது. இதன் தொடர்ச்சியாக 55 பந்துகளில் பவுண்டரியே வரவில்லை. இந்த சீசனில் பவுண்டரி இல்லாத தொடர்ச்சியில் இதுவே அதிக பந்துகளாகும். சிஎஸ்கேவின் சிறந்த ஸ்பின் ஹிட்டரான ஷிவம் துபே கொஞ்சம் கூட சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஃபுல்லாக மிடில் ஸ்டம்பில் வந்த பந்தை தூக்கி அடிக்க முயன்றார். பந்து மெதுவாக வந்ததால் பேடைத் தாக்க எல்.பி.ஆனார். ரிவியூ விரயம். டக் அவுட்.

உலகக் கோப்பை டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா, சஹார் வீசிய உள்ளே வந்த பந்தை முன் காலில் வாங்கி எல்.பி.ஆனார். மட்டைக்கும் பந்துக்கும் சம்பந்தமே இல்லாமல் ஆடினார். அவுட் ஆகிச் சென்றவரை அழைத்து ரிவியூ செய்தார் ருதுராஜ். 2வது ரிவியூவும் விரயம் ஆனதால் ரிவியூவை இழந்தனர்.

ராகுல் சஹார் மொயின் அலியைக் கழற்றியதோடு 19வது ஓவரில் 3 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்தார். அதுவும் தோனி ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, சாம் கரனின் தைரியம் பாராட்டத்தக்கது என்பதை விட தோனி ஸ்பின்னுக்கு எதிராக சமீப காலங்களில் என்ன ஆடினார் என்பதில் கரனின் பரிச்சயம் வெளிப்பட்டது.

தோனி தன்னைச் சுற்றி ஒரு கற்பனையான அரைவட்டம் போட்டுக் கொண்டால் அந்த இடத்தில் விழும் பந்தைத்தான் அடிப்பார். ராகுல் சஹார் திறமையாக அந்த ஆர்க்கில் வீசவில்லை. தோனி செம தடவு தடவினார். கடைசியில் ரன் அவுட் ஆனார். இந்தத் தொடரில் முதல் முறையாக ஆட்டமிழந்தார். ஒழுங்காக கிரமத்துடன் சீரியசாக வீசினால் தோனியினால் பழைய மாதிரி அடிக்க முடியவில்லை என்பது வெளிப்படை. அதை ஒரு ஸ்பின்னர் அதுவும் ராகுல் சஹார் நிரூபித்துக் காட்டினார்.

சிஎஸ்கேவை மொத்தத்தில் ஸ்பின்னர்களின் ஓவர்கள் காலி செய்தன. . சிஎஸ்கே ஸ்பின்னர்களான ஜடேஜா, மொயின் அலி இருவரும் சேர்ந்து மாறாக 5 ஓவர்களில் 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். ஸ்லோ பிட்சைப் போட்டு தங்கள் தோல்வியை தாங்களே தேடிக்கொண்டது சிஎஸ்கே. (நன்றி த ஹிந்து)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .