2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘செஸ்’ஸில் புர்கா அணிந்து பங்கேற்ற ஆண்

Editorial   / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் ஓபன் செஸ் போட்டியில் ஆண்ணொருவர் பெண் வேடமிட்டு விளையாடி மாட்டிக்கொண்டுள்ள சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது. அங்கு நடைபெறும் போட்டியில்,  தன்னை பெண்ணாக காட்டிக்கொள்ள தலை முதல் கால் வரை கருப்பு நிற புர்கா உடையுடன், மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த ஸ்டான்லி ஓமோண்டி, போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது பெயரை ‘மில்லிசென்ட் ஆவர்` என்று பதிவு செய்திருந்தார்.

ஆனால் அடையாளம் தெரியாத வீரரின் திடீர் வெற்றி, போட்டியை நடத்தியவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஓமோண்டியின் நடவடிக்கை அம்பலமானது.

தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் ஒன்றை ஓமோண்டி அளித்தார்.   'நிதித் தேவைகளுக்காக' இப்படி செய்ததாக ஓமோண்டி குறிப்பிட்டுள்ளார்.

தனது செயலுக்கு தண்டனையாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஓமோண்டிக்கு பல ஆண்டுகள் செஸ் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும். ஆனால் நிரந்தரமாக அவர் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படாது," என கென்யாவின் செஸ் கூட்டமைப்பின் தலைவரான பெர்னார்ட் வஞ்சலாத் தெரிவித்தார்.

"முதலில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஹிஜாப் அணிந்து விளையாடுவது இயல்பானது," ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் மிகவும் வலிமையான வீராங்கனைகளை அவர் தோற்கடித்தார். அதை நாங்கள் கவனித்தோம். இதுவரை எந்த பெரிய போட்டிகளிலும் விளையாட ஒரு நபர், முதல் தொடரிலேயே வெற்றிகளை குவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது."

ஓமோண்டி யாரிடமும் பேசாமல் இருந்ததும், அவர் அணிந்து இருந்த காலணிகளும் சந்தேகத்தை அதிகரித்தது.

"அந்த வீரர் அணிந்திருந்த ஷூ, ஆண்கள் அணியும் காலணி போல இருந்தது. இதுபோன்ற ஷூவை பெண்கள் அணிய மாட்டார்கள்,"  "அவர் பேசவில்லை என்பதையும் நாங்கள் கவனித்தோம். தனது அடையாள அட்டையை பெற வந்தபோதும் எதுவுமே பேசவில்லை. வழக்கமான எதிரில் விளையாடும் வீராங்கனையுடன் அனைவரும் பேசுவார்கள். ஆனால் இவர் பேசாமலே இருந்தார்."

இத்தனை சந்தேகம் இருந்தும், ஓமோண்டியை சோதனையிட அதிகாரிகள் தயங்கினர். நான்காவது சுற்றுக்கு முன்னேறி இருந்த அவரை, மத ரீதியாக உடை அணிந்து இருப்பதை காரணமாக காட்டி சோதனையிடுவது பிரச்சனையை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் கருதினர்.

ஆயினும், ஓமோண்டியை விசாரணைக்கு அழைத்தனர் கென்யா நாட்டு செஸ் கூட்டமைப்பு அதிகாரிகள்.

"வலுவான ஒரு வீராங்கனையை அவர் வீழ்த்திய உடன் நாங்கள் அவரை அழைத்தோம். அவர் தைரியமாக எங்களிடம் வந்தார். தான் ஒரு ஆண் என்பதையும் ஒப்புக் கொண்டார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த அவர், நிதி நெருக்கடி காரணமாக இப்படிச் செய்தேன் என்றார். இந்த தொடரில் பட்டத்தை வென்றால் அதன்மூலம் கிடைக்கும் பணம் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன் என்று எங்களிடம் கூறினார்."

பரிசுத் தொகை எவ்வளவு?

கென்யாவின் தலைநகர் நைரோபியில் கடந்த வாரம் தொடங்கிய கென்யா ஓபன் செஸ் போட்டியில் 22 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பெண்கள் பிரிவில் 99 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் வெற்றி பெறுபவருக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2.45 லட்சம் ) பரிசாக கிடைக்கும்.

கென்யாவில், ஓமோண்டி ஒரு பிரபல செஸ் வீரர். ஆண்கள் பிரிவை விட பெண்கள் பிரிவில் கலந்து கொண்டால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என ஓமோண்டி கருதியிருக்கலாம் என்று வஞ்சலா கூறினார்.

கென்யாவின் செஸ் கூட்டமைப்பினர் இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் வயது மோசடி வழக்குகளை எதிர்கொண்டு இருந்தாலும், இது போன்ற மோசடி நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.

இந்த வழக்கு, அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த மோசடி தொடர்பான தண்டனை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கும் (FIDE) விசாரணைக்காக அனுப்பப்படும் என்று வஞ்சலா கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X