2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜேர்மன் குரான் பிறீயை வென்றார் வெர்ஸ்டப்பன்

Editorial   / 2019 ஜூலை 29 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விட்டு விட்டு பெய்த மழைக்குள் இடம்பெற்ற, விபத்துக்களால் நிரம்பியிருந்த நேற்று இடம்பெற்ற ஜேர்மன் குரான் பிறீயை றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.

வெர்ஸ்டப்பன் வென்ற இப்பந்தயத்தை இறுதியிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, 14ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்திருந்த டொரோ றோஸோவின் டானியால் கியாட் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

இந்நிலையில் இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்பு ஃபோர்மியுலா வண் சம்பியனும், மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் இரண்டு தவறுகளையடுத்து 11ஆம் இடத்திலேயே பந்தயத்தை நிறைவு செய்திருந்தார்.

இதேவேளை, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த ஹமில்டனின் சக மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ், பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்தபோதும் எல்லைச் சுவருடன் மோதி பந்தயத்திலிருந்து விலகியிருந்தார்.

ஹமில்டன், போத்தாஸ் தவிர ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க்கும் இரண்டாமிடத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லைச் சுவரில் மோதியிருந்த நிலையில், றெனோல்ட் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ ஹல்கென்பேர்க்கும் அதே இடத்தில் எல்லைச் சுவரில் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பந்தயம் முடிவடைந்தைத் தொடர்ந்து ஏழாமிடத்திலிருந்த அல்ஃபா றோமியோ அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன், எட்டாமிடத்திலிருந்த இத்தாலிய ஓட்டுநரான அன்டோனியோ ஜியோவினாஸி ஆகியோருக்கு ஓட்டுநர் உதவி மீறல் தொடர்பாக 30 செக்கன்கள் தண்டம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்பதாமிடத்துக்கு ஹமில்டன் மேலெழுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள போத்தாஸுக்கும் தனக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை 41 புள்ளிகளாக ஹமில்டன் அதிகரித்துக் கொண்டுள்ளார். 225 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஹமில்டனும், 184 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் போத்தாஸும், 162 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் போத்தாஸும் காணப்படுகின்றனர். நான்காமிடத்தில் 141 புள்ளிகளுடன் வெட்டல் காணப்படுகின்ற நிலையில், 120 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் லெக்கலெர்க் காணப்படுகின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .