2025 ஜூலை 21, திங்கட்கிழமை

’டி வில்லியர்ஸும் ஸ்டெய்னும் நேரடியாக அணியில்’

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுபேறுகள் சிறப்பாக இருப்பதுடன் உடற்றகுதியும் இருக்குமானால், தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட வீரர்களான ஏ.பி டி வில்லியர்ஸும் டேல் ஸ்டெய்னும் டெஸ்ட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணியில் நேரடியாக இடம்பெறுவார்கள் என்றவாறான கருத்துகளை தென்னாபிரிக்க அணியின் புதிய பயிற்சியாளரான ஒட்டிஸ் கிப்ஸன் வெளிப்படுத்தியுள்ளார்.

காயங்கள், டெஸ்ட் போட்டிகளில் நீண்ட கால விடுப்பொன்று எடுத்துக் கொண்டதன் காரணமாக, கடந்தாண்டு ஜனவரிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதற்கு டி வில்லியர்ஸ் தயாரகவுல்ள நிலையில், இவ்வாண்டில் ஒரு முதற்தரப் போட்டியிலேயே விளையாடிள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படுகின்ற நிலையில், பெறுபேறுகளின் அடிப்படையிலேயே, டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடிக்க முடியும் என்பதை, டி வில்லியர்ஸே ஒத்துக் கொண்டிருந்தார். இந்நிலையிலேயே, டி வில்லியர்ஸின் முன்னைய பெறுபேறுகள் காரணமாக, டெஸ்ட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணியில் எவ்வாறாவது டி வில்லியர்ஸுக்கான இடம் உருவாக்கப்படும் என்றவாறான கருத்துகளை கிப்ஸன் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், பொக்ஸிங் டே என்றழைக்கப்படும் டிசெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, சிம்பாப்வேக்கெதிரான, முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியிலும், இந்தியா, அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடர்களிலும் டி வில்லியர்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோலவே, காயத்திலிருந்து குணமடைந்து, இம்மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, தென்னாபிரிக்க உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரில் மீள்வருகையை நடாத்த எதிர்பார்த்துள்ள டேல் ஸ்டெய்னும் மேற்குறித்த தொடர்களில் விளையாடுவார் என்றவாறான கருத்துகளை கிப்ஸன் வெளிப்படுத்தியுள்ளார். கடந்தாண்டு நவம்பருக்குப் பின்னர் எந்தவகையான போட்டிகளிலும் ஸ்டெய்ன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்காவின் திட்டங்களில் காணப்பட்டால் மாத்திரமே தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்காக விளையாடப் போவதாகவும் இல்லாவிடின் இங்கிலாந்து கவுண்டி அணியொன்றுடன் கொல்பக் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதான கருத்துகளை தென்னாபிரிக்காவின் இன்னொரு சிரேஷ்ட வீரரான மோர்னி மோர்கல் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தென்னாபிரிக்காவில் விளையாடுவதற்கு மோர்கள் உறுதியளித்துள்ளார் என கிப்ஸன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்னாபிரிக்க அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் ஒட்டிஸ் கிப்ஸன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பையும் தான் ஏற்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், தற்போது பந்துவீச்சுப் பயிற்சியாளராகவுள்ள சார்ள் லாங்வெல்டின் ஒப்பந்தம் நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், துடுப்பாட்டப் பயிற்சியாளர் நீல் மக்கன்ஸியின் ஒப்பந்தம் நீடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X