Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வெலிங்டனில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கையில், சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தால் வெள்ளையடிக்கப்பட்ட இலங்கை, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நியூசிலாந்தில் அவ்வணிக்கும் சவால் விடுக்குமா என்ற பலமான கேள்வி காணப்படுகின்றது.
அந்தவகையில், அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள அணித்தலைவர் தினேஷ் சந்திமால், முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், இத்தொடரின் உப அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுத் கருணாரத்ன ஆகியோரின் பெறுபேறுகளிலேயே இலங்கையணி, நியூசிலாந்துக்கு சவால் விடுக்கக் கூடிய தன்மை காணப்படுகின்றது.
மறுபக்கமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து மிகுந்த நம்பிக்கையுடன் இத்தொடரில் களமிறங்குகின்றது. அத்தொடரில், அணியின் தலைவர் கேன் வில்லியம்சனுடன் ஹென்றி நிக்கொல்ஸ், பி.ஜெ வட்லிங் போன்றோரும் பங்களிப்பை வழங்கிய நிலையில், இவர்களுடன் சேர்த்து இலங்கைப் பந்துவீச்சாளர்களால் இலக்கு வைக்கப்பட வேண்டியவராக றொஸ் டெய்லர் காணப்படுகின்றார்.
இந்திய துணைக்கண்ட அணிகள், நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது வழமையாக அளிக்கப்படும் வரவேற்பு போலவே போட்டி ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பதாக நேற்று ஆடுகளம் பச்சைப் பசேல் என்றவாறு காணப்படுகின்றது.
ஆக, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகவே ஆடுகளம் காணப்படுமென்றபோதும் அது எவ்வளவு நேரத்துக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகக் காணப்படுமென்ற கேள்விக்குறியொன்றும் காணப்படுகிறது.
நியூசிலாந்துக்கு கடந்த முறை இலங்கை விஜயம் செய்தபோது இலங்கையணியின் குமார் சங்கக்கார இரட்டைச் சதத்தை பெற்றிருந்ததோடு, கடந்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற டெஸ்டில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் இரட்டைச் சதம் பெற்றிருந்தார்.
ஆக, ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய ஆடுகளம், பின்னர் தட்டையானதாக மாறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்ற நிலையில் நாணயச் சுழற்சி முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், நான்காமிடத்தில் நியூசிலாந்தும் ஆறாமிடத்தில் இலங்கை காணப்படுகின்ற நிலையில், இத்தொடர் 0-0 என்றோ அல்லது 1-1 என்றோ முடிவடைந்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்படாது.
இதுதவிர, இலங்கை இத்தொடரை 1-0 என்றோ அல்லது 2-0 என்றோ வென்றாலும் இலங்கையின் தரவரிசையில் மாற்றமேற்படாதென்பதோடு இரண்டு சந்தர்ப்பங்களிலும் நியூசிலாந்து ஐந்தாமிடத்துக்கு கீழிறங்கும்.
இதேவேளை, இத்தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றால் அவ்வணி மூன்றாமிடத்துக்கு முன்னேறுவதோடு இலங்கை ஏழாமிடத்துக்கு கீழிறங்கும் என்பதோடு, தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றால் இரண்டாமிடத்துக்கு அவ்வணி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் இலங்கையணி: 1. தனுஷ்க குணதிலக, 2. திமுத் கருணாரத்ன, 3. தனஞ்சய டி சில்வா, 4. குசல் மென்டிஸ், 5. தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), 6. அஞ்சலோ மத்தியூஸ், 7. நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), 8. டில்ருவான் பெரேரா, 9. சுரங்க லக்மால், 10. நுவான் பிரதீப், 11. லஹிரு குமார.
எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: 1. ஜீட் றாவல், 2. டொம் லேதம், 3. கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), 4. றொஸ் டெய்லர், 5. ஹென்றி நிக்கொல்ஸ், 6. பி.ஜெ வட்லிங் (விக்கெட் காப்பாளர்), 7. கொலின் டி கிரான்ட்ஹொம், 8. டிம் செளதி, 9. அஜாஸ் பட்டேல், 10. ட்ரெண்ட் போல்ட், 11. நீல் வக்னர்.
4 hours ago
4 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
03 Oct 2025