Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் லிவர்பூல் வென்றது.
இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே முன்னேறிச் சென்ற டொட்டென்ஹாமின் மத்தியகளவீரர் மூஸா ஸிஸாகோ கொடுத்த பந்தை அவரின் சக முன்களவீரரான சண் ஹெயுங்-மின் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த நிலையில், அது லிவர்பூலின் பின்களவீரர் டெஜா லொவ்ரெனில் பட்டு கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வர அதை தலையால் முட்டி தமது முன்களவீரர் ஹரி கேன் கோலாக்க டொட்டென்ஹாம் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், லிவர்பூலின் முன்களவீரர் மொஹமட் சாலாவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை அபாரமாகத் தடுத்திருந்த டொட்டென்ஹாமின் கோல் காப்பாளர் போலோ கஸ்னியா, தொடர்ந்து அவரின் சக முன்களவீரர் றொபேர்ட்டோ ஃபெர்மினோவின் உதையையும் தடுத்திருந்தார். பின்னர் லிவர்பூலின் பின்களவீரர் வேர்ஜில் வான் டிஜிக், கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டியதை கோல் கம்பத்துக்கு மேலால் கஸ்னியா தட்டி விட்டிருந்ததுடன், லிவர்பூலின் இன்னொரு பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் உதையையும் தட்டி விட்டிருந்தார்.
இந்நிலையில், லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸனைத் தாண்டியபோதும் சண்ணின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.
பின்னர் போட்டியின் 52ஆவது நிமிடத்தில் தமதணித்தலைவரும் மத்தியகளவீரருமான ஜோர்டான் ஹென்டர்சனால் பெறப்பட்ட கோலோடு கோலெண்ணிக்கையை லிவர்பூல் சமப்படுத்தியது.
தொடர்ந்து, டொட்டென்ஹாமின் பின்களவீரர் சேர்ஜியோ ஒரியரால் லிவர்பூலின் முன்களவீரர் சாடியோ மனே வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை சாலா 75ஆவது நிமிடத்தில் கோலாக்கியதோடு 2-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் லிவர்பூல் வென்றது.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆர்சனல் முடித்திருந்தது. ஆர்சனல் சார்பாக, சோக்ரடிஸ் பஸ்தபோலஸ், டேவிட் லூயிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிறிஸ்டல் பலஸ் சார்பாக, லூகா மிலிவோஜெவிச், ஜோரான் அயூ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, நொர்விச் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, ஸ்கொட் மக்டொமினி, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், அன்டோனி மாஷியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நொர்விச் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒனெல் ஹெர்ணான்டஸ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago