Shanmugan Murugavel / 2015 நவம்பர் 25 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி,இன்று ஆரம்பித்தது. நாக்பூரில், துடுப்பெடுத்தாடக் கடினமான ஆடுகளத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், துடுப்பாட்டத்தில் சிறப்பான நிலையை வெளிப்படுத்த, இரு அணிகளும் தடுமாறின.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததோடு, மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடனும் ஒரு வேகப்பந்து வீச்சாளருடனும் களமிறங்கியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. முதலாவது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து, சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற அவ்வணியின் முதலாவது விக்கெட்டாக, ஷீகர் தவானை, பகுதிநேரச் சுழற்பந்து வீச்சாளரான டீன் எல்கர் வீழ்த்தினார். இரண்டாவது விக்கெட்டாக 69 ஓட்டங்களில் முரளி விஜய் வீழ்ந்த போதிலும், ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களுடன் ஓரளவு பலமான நிலையிலேயே காணப்பட்டது,
எனினும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 78.2 ஓவர்கள் மாத்திரம் துடுப்பெடுத்தாடி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.துடுப்பாட்டத்தில் முரளி விஜய் 40 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 34 ஓட்டங்களையும் ரிதிமான் சகா 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிறப்பாகப் பந்துவீசியிருந்த சைமன் ஹார்மர், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஆடுகளத்தில், சிறப்பாகப் பந்துவீசிய மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுகளையும், கஜிஸோ ரபடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தவிர, டீல் எல்கர், இம்ரான் தாஹிர் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முதலிரு போட்டிகளிலும் சுழற்பந்துவீச்சில் தடுமாறியிருந்த நிலையில், தனது முதலாவது
இனிங்ஸைத் தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 4ஆவது ஓவரிலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து, 3ஆம் இலக்கத்தில் அனுப்பப்பட்ட இம்ரான் தாஹிரும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்படி, 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ஓட்டங்களுடன், தென்னாபிரிக்கா காணப்படுகிறது.
டீல் எல்கர் 7 ஓட்டங்களுடனும், ஹஷிம் அம்லா ஓட்டமேதும் பெறாமலும் களத்திலுள்ள அதேவேளை, வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளை அஷ்வினும் ஜடேஜாவும் வீழ்த்தினர்.
விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட இந்த முதல்நாளில், 226 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டதோடு, 12 விக்கெட்டுகள் இழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago