2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

தடைக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கில் பங்குபற்ற ரஷ்யாவுக்கு வாய்ப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 15 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ரஷ்ய தடகளச் சம்மேளனத்தைத் தடை செய்வதற்கு தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கம் எடுத்த முடிவுக்கு மத்தியிலும், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அத்தோடு, ஒலிம்பிக்கில் பங்குபற்றும் ரஷ்யாவின் சந்தர்ப்பம் தவறவிடப்படுமாயின், ரஷ்ய தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக, வடிம் ஸலிசெனொக் அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கத்தின் கூட்டத்தில் 22-1 என்ற வாக்குகளின் அடிப்படையில், ரஷ்யாவுக்கு இடைகாலத்தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப்பட்டிருந்தது.

எனினும், வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளின்படி, ரஷ்ய தடகளச் சம்மேளனத்தை மீளஉருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கத்தின் நெறிமுறைகளுக்கும் ஊக்கமருந்துக்கெதிரான விதிமுறைகளுக்கு ஏற்றுச் செயற்பட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே, அவற்றினைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில், ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் தடகள வீரர்கள் பங்குபற்றக்கூடியதாக இருக்கும்.

ஊக்கமருந்துக்கெதிரான செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ரஷ்யாவில் கட்டமைப்புரீதியிலான ஊக்கமருந்துப் பாவனை காணப்படுவதாகவும், தேசத்தின் உதவியுடன் இவை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதிலிருந்து ரஷ்யா தடை செய்யப்பட வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .