2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

தடை செய்யப்படுமா ரஷ்யா?

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 10 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்க மருந்துக்கெதிரான உலக முகவராண்மையால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் அடிப்படையில், ரஷ்ய வீர, வீராங்கனைகள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தினர் எனவும், அந்நாட்டிலுள்ள ஊக்க மருந்துப் பாவனையானது ஆழ்ந்த அளவில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் பிரகாரம், 2012ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யா பெற்றுக் கொண்ட 24 தங்கப் பதக்கங்கள் பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யாவிலுள்ள ஊக்க மருந்துச் சோதனை நிலையம், பெறப்பட்ட முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும், அதன் மூலமே தவறானவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில், அரச ஆதரவுடனான ஊக்க மருந்துப் பாவனை இடம்பெறுவதாகக் குறிப்பிடும் அவ்வறிக்கை, ஊக்க மருந்து விடயத்தை அந்நாடு பெரியதொரு விடயமாகக் கருதவில்லை எனவும் தெரிவிக்கிறது.

அத்தோடு, பல தடகள வீரர்களுக்கு, தங்களது தெரிவுக்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றில், அரச ஆதரவுடனான ஊக்க மருந்துப் பாவனைகளை மேற்கொள்வது, இல்லாதுவிடின்;, போட்டிகளில் பங்குபற்றாமல் விடுவது என்ற தெரிவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு, ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரை வழங்குவதாகவும், உண்மையில், தானாக முன்வந்து ரஷ்யா, சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகி, மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென, அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, தடகள சம்மேளனங்களில் சர்வதேசச் சங்கம், இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இலஞ்சம், ஊழல் ஆகியனவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .