2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் இன்று: துடுப்பாட்டத்தை சரிசெய்யுமா பாகிஸ்தான்?

Editorial   / 2019 ஜனவரி 03 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கேப் டெளணில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து கவனமும் பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தின் மீதே காணப்படுகிறது.

முதலாவது போட்டியைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர்களான அணித்தலைவர் சப்ராஸ் அஹமட், அஸார் அலி, அசாட் ஷபிக் ஆகியோரை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வீரர்களறையில் வைத்து எச்சரித்திருந்தார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இவர்கள் மூவருமே முக்கிய கவனம் பெறுகின்றனர்.

இதில், இத்தொடருடன் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைமைப் பதவியிலிருந்து சப்ராஸ் அஹமட் விலகுவது குறித்த கருத்துகள் எழுந்திருந்த நிலையில், முதலாவது டெஸ்டின் இரண்டு இனிங்ஸ்களிலும் ஓட்டங்களெதனையும் பெறாத நிலையில் மிகுந்த அழுத்தத்குள்ளானவராக இவர் காணப்படுகின்றார்.

அஸார் அலி, அசாட் ஷபிக் ஆகியோர் தொடர்ச்சியான அண்மைய காலங்களில் தொடர்ந்து மோசடியான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருக்காதபோதும் முக்கியமான தருணங்களில் அண்மைக் காலங்களில் இருவரும் அணியைத் தாங்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகையில், அசாட் ஷபிக்கின் கடந்த டெஸ்ட் ஆட்டமிழப்புகளும் அதுக்கு வலுச்சேர்ப்பவையாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில், முதலாவது டெஸ்டில் காயம் காரணமாக இறுதிநேரத்தில் விளையாடியிருக்காத மத்தியவரிசை துடுப்பாட்டவீரர் ஹரீஸ் சொஹைல் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், தன்னை முதலாவது போட்டியில் பிரதியிட்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஷண் மசூட்டை இரண்டாவது போட்டியில் பிரதியிடாமல், முதலாவது போட்டியில் ஓட்டங்களைப் பெற்றிருக்காத ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பக்கர் ஸமனையே அணியில் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்ஸில் ஷண் மசூட் அரைச்சதம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் அப்பாஸும் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரும் முதலாவது டெஸ்டில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில் அணித்தெரிவில் தலையிடியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான், அனுபவம் குறைவாக இருக்கும் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அவ்ரிடிக்குப் பதிலாக அவரை அணியில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, தென்னாபிரிக்காவும் தமது வேகப்பந்துவீச்சாளர் தெரிவில் சிக்கலை எதிர்நோக்குகிறது. காயத்திலிருந்து குணமடைந்த வேர்ணன் பிலாந்தர் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவருக்குப் பதிலாக விளையாடிய டுவன்னே ஒலிவரை கஜிஸோ றபாடா, டேல் ஸ்டெய்னைத் தாண்டி அணியில் வைத்திருப்பதா என்ற கேள்விக்குறியை தென்னாபிரிக்கா எதிர்நோக்குகிறது.

அந்தவகையில், கட்டுப்பாட்டை வழங்கும் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ்ஜையும் அணியிலிருந்து நீக்க தென்னாபிரிக்கா விரும்பாதென்பதால், பிலாந்தர் ஓரளவு துடுப்பெடுத்தாடக்கூடியவர் என்பதால், தெனியுஸ் டி ப்ரூனை அவர் மூலம் பிரதியிட்டு ஐந்து பந்துவீச்சாளர்களுடன் தென்னாபிரிக்கா களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .