2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நாளை மறுதினம் ஆரம்பிக்கின்றது இலங்கை எதிர் அவுஸ்திரேலியா தொடர்

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் காலை ஒன்பது மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு அணிகளுமே அத்தொடருக்கு தமது வீரர்களை தயார்படுத்தும் தொடராக இத்தொடரைக் கருத முடியும்.

இலங்கையணியைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை முன்னணி வீரர்கள் புறக்கணித்திருந்தபோதும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்திலிருந்த பாகிஸ்தானை அவ்வணியின் சொந்த மண்ணிலேயே கூட்டு முயற்சியால் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

அந்த இலங்கையணியின் பெறுபேறுகள் முன்னணி வீரர்களுக்கு அழுத்தத்தை வழங்கிய நிலையில் அணியில் காத்திரமானதொரு போட்டி நிலவுகையில் குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.

மறுபக்கமாக, பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பிரகாசித்திருந்தபோதும் வேகமான அவுஸ்திரேலிய ஆடுகளங்களிலும் பானுக ராஜபக்‌ஷ, ஒஷாட பெர்ணான்டோ ஆகியோர் தம்மை நிரூபித்துக் காட்ட வேண்டியவர்களாக உள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் தமதணித்தலைவர் லசித் மலிங்கவின் வருகையோடு, பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பிரகாசித்த நுவான் பிரதீப், இசுரு உதான, வனிடு ஹசரங்கவோடு பலமானதாகவே இலங்கை காணப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ்சோடு, அலெக்ஸ் காரி, கிளென் மக்ஸ்வெல்லோடு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணரின் வருகையோடு பலமானதாகவே துடுப்பாட்டம் காணப்படுகின்ற நிலையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான வரிசையை அடையாளங் காணக்கூடிய தொடராக இது காணப்படுகின்றது.

இதேவேளை, பந்துவீச்சுப் பக்கமும் பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், பில்லி ஸ்டான்லேக், அன்றூ டை, அடம் ஸாம்பா எனப் பலமாகக் காணப்படும் அவுஸ்திரேலியா, தமது இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் அஸ்தன் அகர், மேலதிக வேகப்பந்துவீச்சாளர் கேன் றிச்சர்ட்ஸனைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய தொடராக இது விளங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .