2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நியூசிலாந்துக்கு சவால் விடுக்குமா பங்களாதேஷ்?

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஹமில்டனில் இலங்கை நேரப்படி நாளை அதிகாமை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 0-3 என வெள்ளையடிக்கப்பட்ட பங்களாதேஷ், அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன், விக்கெட் காப்பாளர் முஷ்பிக்கூர் ரஹீம், துடுப்பாட்டவீரர் மொஹமட் மிதுன் ஆகியோர் தத்த்தமது காயங்களிலிருந்து குணமடைந்து வருகையில், டெஸ்ட் தொடரில் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவதற்கு, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து மலையளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்களாதேஷுக்கு ஆபத்தாய் அமைந்த நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் செளதி ஆகியோரின் ஸ்விங்கை தமது இனிங்ஸின் ஆரம்பத்தில் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதிலேயே பங்களாதேஷின் பெறுபேறுகள் அமையப் போகின்றன.

அந்தவகையில், சிரேஷ்ட துடுப்பாட்டவீரர்களான தமிம் இக்பால், மகமதுல்லாவுடன், இளம் வீரர்களான லிட்டன் தாஸ், செளமியா சர்கார் பிரகாசித்தாலே நியூசிலாந்துக்கு சவால் விடுப்பது குறித்து பங்களாதேஷ் சிந்திக்க முடியும்.

மறுபக்கமாக, அணித்தலைவர் கேன் வில்லியம்சன், றொஸ் டெய்லர், டொம் லேதம், ஹென்றி நிக்கொல்ஸ் என பலமான துடுப்பாட்டவரிசையை நியூசிலாந்து கொண்டுள்ளபோதும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களைப் பெறாத கேன் வில்லியம்சனிடமிருந்து ஓட்டங்களைப் பெற நியூசிலாந்து எதிர்பார்க்கும்.

இதுதவிர, சுழற்பந்துவீச்சாளராக குழாமில் இடம்பிடித்துள்ள டொட் அஸ்டில், டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில், வெளியே அஜாஸ் பட்டேல், இஷ் சோதி, மிற்செல் சான்ட்னெர், வில்லியம் சோமர்வில்லி என வரிசையாக சுழற்பந்துவீச்சாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான, அணிகளின் தரவரிசையில், முதற்தடவையாக இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து, அந்த இடத்தை தக்க வைப்பதற்கு இத்தொடரை கட்டாயம் வென்றாக வேண்டும்.

தரவரிசையில், இரண்டாமிடத்திலிருந்து ஐந்தாமிடம் வரை உள்ள அணிகளுக்கிடையே மூன்று புள்ளியே அதிகபட்சமாக வித்தியாசம் உள்ள நிலையில், இத்தொடரை சமநிலையில் முடித்தாலோ அல்லது தொடரை இழந்தாலோ, ஐந்தாமிடத்துக்கு நியூசிலாந்து கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரவரிசையில் ஒன்பதாமிடத்தில் பங்களாதேஷ் காணப்படுகின்ற நிலையில், தொடரை வென்றால், எட்டாமிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .