2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 14 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், தம்புள்ளவில் புதன்கிழமை (13) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்பத்திலேயே ஜேக்கப் டஃபியிடம் பதும் நிஸங்கவை இழந்தது. எனினும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்ணாண்டோவும், குசல் மென்டிஸும் ஓட்டங்களைச் சேகரித்த நிலையில் 100 (115) ஓட்டங்களுடன் இஷ் சோதியிடம் அவிஷ்க வீழ்ந்தார்.

அடுத்த ஓவரிலேயே மிஷெல் பிறேஸ்வெல்லிடம் சதீர சமரவிக்கிரம வீழ்ந்ததுடன், அதிரடியாக ஓட்டங்களைப் பெற்ற குசலும் 143 (128) ஓட்டங்களுடன் டஃபியிடம் வீழ்ந்தார். பின்னர் அசலங்க 40 (28) ஓட்டங்களுடன் டஃபியிடம் வீழ்ந்ததோடு 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்ட நிலையில் இலங்கையின் இனிங்ஸ் அத்துடன் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறையில் 27 ஓவர்களில் 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்துக்கு வில் யங்கும், டிம் றொபின்சனும் ஆரம்பத்தில் ஓட்டங்களைச் சேகரித்தனர்.

எனினும் வேகமாக அவர்களும் ஓட்டங்களைச் சேகரிக்காத நிலையில் றொபின்சன் 35 (36) ஓட்டங்களுடனும், யங் 48 (46) ஓட்டங்களுடனும் தீக்‌ஷனவிடம் வீழ்ந்தனர். தொடர்ந்து ஹென்றி நிக்கொல்ஸ் அடுத்த ஓவரிலேயே அசலங்கவிடம் ஹென்றி நிக்கொல்ஸ் வீழ்ந்தார். அடுத்த ஒரு ஓவர் இடைவெளியில் மார்க் சப்மன், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் அசலங்க, ஜெஃப்ரி வன்டர்சேயின் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்ந்தனர்.

பின்னர் டில்ஷான் மதுஷங்கவிடம் மிற்செல் ஹே வீழ்ந்ததுடன், மிற்செல் சான்ட்னெர் ரண் அவுட்டான நிலையில், நாதன் ஸ்மித் மற்றும் சோதியும் மதுஷங்கவிடம் விழ 27 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களையே பெற்று 45 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பிறேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 34 (32) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக குசல் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .