2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பிரான்ஸூக்குத் தோல்வி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. எனினும், அப்போட்டியின் வெற்றி, தோல்வி, முன்னுரிமையானதாக இருந்திருக்கவில்லை.

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு அணிகளுக்குமிடையிலான இப்போட்டி இடம்பெறுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஆனால், அப்போட்டியை நடாத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, மைதானத்தில் பூக்கள் வைக்கப்பட்டு, மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், பிரான்ஸ் தேசிய கீதத்தின் பெயரான 'லம சியஸ்" என்பது உரக்கப் பாடப்பட்டோடு, அவ்வப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கெதிரான கோசங்களும் எழுப்பப்பட்டன.

போட்டியில், 39ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் டேல் அலி முதலாவது கோலைப் பெற்று, 1-0 என்ற முன்னிலையை வழங்கினார். தொடர்ந்து இரண்டாவது பாதியில், அணியின் தலைவர் வெய்ன் றூணி, மற்றொரு கோலைப் பெற்று, அவ்வணிக்கு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும், போட்டியில் முடிவென்பது, கோல்களின் நிலைமையில் தங்கியிருக்காது, அத்தாக்குதல் நடைபெற்று நான்கு நாட்களில் இப்போட்டி இடம்பெற்றமையும், தாக்குதல்களுக்கு அடிபணியாது, விளையாட்டு தன்னை வெளிப்படுத்தியமையும், கால்பந்தாட்டத்தின் உண்மையான வெற்றியாகக் கருதப்படுகிறது.

இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரோன், பிரித்தானிய இளவரசர் வில்லியம், இங்கிலாந்து கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கிரெக் டைக், இலண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், இப்போட்டியைப் பார்வையிட்டிருந்தனர்.

இப்போட்டியைச் சூழக் காணப்பட்ட உணர்வெழுச்சிகள், ஆபத்துகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வெம்ப்ளி மைதானத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .