2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பிறீமியர் லீக்: மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் இரண்டாம் நாள் போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மன்செஸ்டர் யுனைட்டெட், போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல்கணக்கில் யுனைட்டெட் வெற்றி பெற்றது. யுனைட்டெட் சார்பாக போட்டியின் 40ஆவது, 59ஆவது, 64ஆவது நிமிடங்களில் ஜுவான் மாத்தா, வெய்ன் ரூனி, ஸல்டான் இப்ராஹிமோவிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.

இந்நிலையில், வெற்றியுடன் பிறீமியர் லீக்கை தொடங்கியுள்ள யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ, ஹென்றிக் மிகிதரயானுடன் அணியை ஆரம்பிக்காமல் மாத்தாவுடன் ஆரம்பித்து ஆச்சரியமளித்திருந்தார். இதேவேளை, உலக சாதனைத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போல் பொக்பா, போட்டித் தடை காரணமாக இப்போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.

இதேவேளை, கோல் மழைகள் பொழியப்பட்ட ஆர்சனல், லிவர்பூல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-3 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. கிடைத்த பெனால்டியை தவறவிட்ட ஆர்சனலின் தியோ வோல்கோட் 31ஆவது நிமிடத்தில் கோல் மழையை ஆரம்பித்து வைக்க, முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் லிவர்பூலின் பிலிப்பி கூட்டினியோ, அபாரமான 'பிறீ கிக்' மூலம் கோலொன்றினைப் பெற்று கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில், 49ஆவது, 56ஆவது, 63ஆவது நிமிடங்களில் அடம் லலானா, கூட்டினியோ, சடியோ மனே ஆகியோர் பெற்ற கோல்களின் மூலம் லிவர்பூல் மூன்று கோல்கள் முன்னிலை பெற்றது. பின்னர், 64ஆவது, 75ஆவது நிமிடங்களில் ஆர்சனலின் ஒக்ஸ்லேட்-சம்பர்லின், கலும் சேம்பர்ஸ் கோல்களினைப் பெற்றாலும் 4-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .