2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிரெஞ்சு லீக் 1 தொடர்: தோற்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், றெனிஸின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் எடின்சன் கவானி கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்தானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், 36ஆவது நிமிடத்தில் றெனிஸின் அணித்தலைவரும் பின்களவீரருமான டேமியன் டா சில்வா தவறாக பின்புறமாகக் கொடுத்த பந்துப்பரிமாற்றத்தை அவர் கோலாக்கி பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு முன்னிலையை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் தமது நட்சத்திர முன்களவீரர் நெய்மர் குழாமில் இல்லாது விளையாடிய பரிஸ் ஸா ஜெர்மைன், தமது இன்னொரு நட்சத்திர முன்களவீரரான கிலியான் மப்பே மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தபோதும், அவரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையும் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

அந்தவகையில், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில் தமது முன்களவீரர் எம்பயே நியங் பெற்ற கோல் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய றெனிஸ், இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் எடுவார்டோ கமவிங்கா வழங்கிய பந்தை முன்களவீரரான றொமைன் டெல் கஸ்டில்லோ தலையால் முட்டிக் கோலாக்கியதோடு முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர், தமது பின்களவீரர் ஜெறெமி கெலின் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில் இரண்டு கோல்களால் முன்னிலை பெறும் வாய்ப்பைத் தவறவிட்டிருந்தது.

மறுப்பகமாக, போட்டியின் இறுதிப் பகுதிகளில் கிலியான் மப்பே, எடின்சன் கவானி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தும் வாய்ப்புகளைத் தவறவிட்ட நிலையில் இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .