2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிறீமியர் லீக் தரவரிசையில் லிவர்பூல், செல்சி பலமடைவு

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் உள்ளூர்க் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் கால்பந்தாட்டத்தில், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற லிவர்பூல், செல்சி அணிகள், தத்தமது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டன. 

புள்ளிகளின் பட்டியலில் முதலிடத்தில் காணப்படும் லிவர்பூல், 13ஆவது இடத்தில் காணப்படும் பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் அணியை எதிர்கொண்டிருந்தது. 

இப்போட்டியின் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திய மொஹமட் சாலா பெற்ற கோலுடன், முன்னிலையைப் பெற்ற லிவர்பூல், அதன் பின்னர் கோல்கள் பெறப்படாத நிலையில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இந்த கோல் காரணமாக, பிறீமியர் லீக்கின் இப்பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றோர் பட்டியலில், 14 கோல்களுடன், முதலிடத்தை சாலா பகிர்ந்துள்ளார். டொட்டென்ஹாம் அணியின் ஹரி கேனும், 14 கோல்களைப் பெற்றுள்ளார். ஆனால், கோல்களைப் பெறுவதற்கான உதவிகள் என்று வரும் போது, கேனின் 4 உதவிகளோடு ஒப்பிடும் போது, சாலா வழங்கிய 7 உதவிகள் அதிகமானவை. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாமிடத்திலிருக்கும் மன்செஸ்டர் சிற்றிக்கும் தனக்குமிடையிலான புள்ளிகளின் வித்தியாசத்தை, 7 புள்ளிகளாக, லிவர்பூல் அதிகரித்துக் கொண்டது. 

இதேவேளை, இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில், நியூகாசில் யுனைட்டெட் அணியை, 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக 9ஆவது நிமிடத்தில் பெட்ரா, 57ஆவது நிமிடத்தில் வில்லியன் ஆகியோர் கோல்களைப் பெற்றனர். நியூகாசில் சார்பாக, 40ஆவது நிமிடத்தில் சியரன் கிளார்க், கோலைப் பெற்றார். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து, புள்ளிகளின் பட்டியலில் 5ஆவது இடத்திலிருக்கும் ஆர்சனலுக்கும் 4ஆவது இடத்திலிருக்கும் தமக்குமான புள்ளிகளின் இடைவெளியை, 6ஆக, செல்சி அதிகரித்துக் கொண்டது. 

ஏனைய போட்டிகளில் ஆர்சனலை 1-0 என வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டும், ஃபுல்ஹாமை 2-1 என பேர்ண்லியும், கிறிஸ்டல் பலஸை 2-1 என வட்ஃபோர்டும், லெய்செஸ்டர் சிற்றியை 2-1 என சௌதாம்டனும் வெற்றிகொண்டன. கார்டிப் சிற்றி, ஹட்டர்ஸ்பீல்ட் டௌண் அணிகளுக்கிடையிலான போட்டி, கோல்கள் பெறப்படாது சமநிலையில் முடிவடைந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .