2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரேயின் ஓய்வுபெறும் முடிவு ‘அதிர்ச்சி’, ‘வருத்தம்’, ‘சரியானது’

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு, பிரித்தானிய வீரர் அன்டி மரே எடுத்துள்ள முடிவு குறித்து அதிர்ச்சியடைவதாக ரொஜர் பெடரரும், வருத்தம் தருவதாக நொவக் ஜோக்கோவிச்சும், அம்முடிவு சரியானது என ரபேல் நடாலும் தெரிவித்துள்ளனர். 

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த மரே, இவ்வாண்டு இடம்பெறவுள்ள விம்பிள்டன் போட்டிகளே, தனது இறுதி டென்னிஸ் போட்டிகளாக அமையுமெனத் தெரிவித்ததோடு, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் கூட, தன்னுடைய இறுதித் தொடராக அமைவதற்கான வாய்ப்புள்ளது எனவும் ஏற்றுக்கொண்டிருந்தார். 

முப்பத்தொரு (31) வயதான மரேக்குக் காணப்படும் இடுப்பு வலி, தொடர்ச்சியாகக் காணப்படும் நிலையில், வேறு வழியின்றி இம்முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், நேற்று (13) கருத்துத் தெரிவித்த 37 வயதான பெடரர், “ஜாம்பவான்” ஒருவரை இழப்பது குறித்து அதிர்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். “அவரை (மரே) ஒரு கட்டத்தில் நாம் இழக்கப் போகிறோம் என்பதை அறிந்து, ஏமாற்றமடைந்ததோடு, கவலையுமடைந்தேன். சிறிதளவுக்கு அதிர்ச்சியும் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். 

பெடரரோடு சேர்ந்து, ஜோக்கோவிச், நடால், மரே ஆகியோர், “பெரிய நால்வர்” என அன்பாக அழைக்கப்பட்ட நிலையில், அந்த யுகம் முடிவுக்கு வருவதை அவர் ஏற்றுக்கொண்டார். ஏனைய மூவரும், அவரது இழப்புக் குறித்து அதிகம் வருத்தமடைவதாக அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த 31 வயதான ஜோக்கோவிச், “அவர் (மரே) கஷ்டப்படுகிறார், வழக்கமாக நகருமளவுக்கு அவர் நகரவில்லை என்பதை அறிவதற்கு, நீங்கள் ஆடுகளத்தில் இருக்கத் தேவையில். அன்டி மரே, தொடர்களிலேயே மிகவும் உடற்றகுதி கொண்ட வீரர்களில் ஒருவர் என்பதை அறிவோம்” எனத் தெரிவித்தார். 

இருவரின் பிறந்த தினங்களுக்கிடையில் சில நாள்கள் வித்தியாசமே உள்ள நிலையில், தங்களுக்கிடையில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த ஜோக்கோவிச், “அவர் மிகவும் அதிகமாகக் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது, வலிகளை உணர்வதைப் பார்க்கும் போது, அவரது நீண்டநாள் நண்பராக, சக வீரராக, எதிர் வீரராக, அது மிகவும் கவலையானதாகவும் காயப்படுத்துவதாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

இதேபோல், மரேயின் ஓய்வு குறித்து நேற்று முன்தினம் (12) கருத்துத் தெரிவித்திருந்த 32 வயதான நடால், “உங்களுக்குக் காயம் இருப்பதன் காரணமாக, உங்களால் சிறப்பாக நகர முடியாதிருக்கும் போது, எந்தவித இலக்கும் இல்லாமல் நீங்கள் ஆடுகளத்துக்குச் செல்லும் போது, முடிவொன்றை எடுப்பதற்கான தருணமது” எனத் தெரிவித்தார். அத்தோடு, மரேயின் ஓய்வு, டென்னிஸுக்கான மிகப்பெரிய இழப்பு எனவும், நடால் தெரிவித்தார். 

“பெரிய நால்வரில்”, அதிகளவு உபாதைகளைச் சந்தித்த வீரராக நடாலே காணப்படும் நிலையில், வலிகள் தொடர்பான அவரது கருத்து, அவரது அனுபவத்திலிருந்து பெறப்பட்டதாகக் காணப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .