2025 ஜூலை 05, சனிக்கிழமை

மலிங்கவுக்கு வெற்றிப் பிரியாவிடையை வழங்குமா இலங்கை?

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரில் இப்போட்டி செலுத்தும் தாக்கத்துக்கும் மேலாக இப்போட்டி உணர்ச்சிபூர்வமானதொன்றாக அமையவுள்ளது. ஏனெனில், இலங்கையில் தோன்றிய தலைசிறந்த வீரர்களிலொருவரான லசித் மலிங்க, டிக்கெட்டுகள் முற்றாக விற்றுத் தீர்ந்த இப்போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

தற்போது 36 வயதாகும் மலிங்க ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் வரைக்கும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளபோதும், அவர் ஆரம்பத்தில் பிரபல்யமடைந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெறுவது அவருக்கும், இரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானதாய் இருந்ததாலேயே குறித்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.

அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் சிறப்பானதாக இருக்கும் பங்களாதேஷை, அவ்வணியின் சிரேஷ்ட சகலதுறைவீரர் ஷகிப் அல் ஹஸன் இல்லாதபோதும் வீழ்த்துவதற்கு துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் கூட்டிணைவாக மேம்பட்டாலே மலிங்கவுக்கு வெற்றிப்பிரியாவிடையை இலங்கை அளிக்க முடியும்.

அதற்கு அஞ்சலோ மத்தியூஸ், குசல் மென்டிஸ், குசல் பெரேரா உள்ளிட்டோர் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். இத்தொடரிலும் குசல் மென்டிஸ் பிரகாசிக்காத சந்தர்ப்பத்தில் அண்மைய காலத்தில் அவருக்கான இறுதித் தொடராக இது அமைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுப்பக்கமாக ஷகிப் அல் ஹஸன் இல்லாத நிலையில், முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா, பதில் அணித்தலைவர் தமிம் இக்பால் மீதான பொறுப்புக்கள் இத்தொடரில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவர்களே இத்தொடரின் போக்கை தீர்மானிப்பவர்களாக விளங்குவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்நிலையில், இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஏழாமிடத்தில் பங்களாதேஷும், எட்டாமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்றநிலையில் இத்தொடரின் எந்த முடிவும் பங்களாதேஷின் நிலையை பாதிக்காதென்ற நிலையில், 3-0 என பங்களாதேஷால் வெள்ளையடிக்கப்பட்டால் ஒன்பதாமிடத்துக்கு இலங்கை கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .