2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மீண்டும் முதலிடத்தில் லிவர்பூல்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியது. மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டமையைத் தொடர்ந்தே, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியது.

எவ்வாறாயினும், காயங்களால் பாதிக்கப்பட்ட மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடனான சமநிலை போட்டி முடிவு லிவர்பூலுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருக்கும். லிவர்பூல் ஒரேயொரு தடவை மாத்திரமே, இப்போட்டி முழுவதிலும் கோல் கம்பத்தை நோக்கி உதையொன்றைச் செலுத்தியிருந்தது. லிவர்பூலின் முன்கள வீரரான றொபேர்ட்டோ பெர்மினோ உபாதைக்குள்ளாக, அவரைப் பிரதியிட்ட இன்னொரு முன்கள வீரரான டேனியல் ஸ்டரிஜ்ஜே, கோல் கம்பத்துக்கு நீண்ட தூரத்திலிருந்து அவ்வுதையைச் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், இப்போட்டியில் கோல் பெறும் மிகச் சிறந்த வாய்ப்பை மன்செஸ்டர் யுனைட்டெட் கொண்டிருந்தபோதும், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகள வீரரான ஜெஸி லிங்கார்ட்டை, லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் அதிசிறப்பாகத் தடுத்திருந்தார்.

இதேவேளை, போட்டியின் இறுதிக் கணங்களில் பிறீ கிக்கொன்றின் மூலம் தனதணியின் கோல் கம்பத்துக்குள்ளேயே லிவர்பூலின் பின்கள வீரர் ஜோயல் மட்டிப் பந்தைச் செலுத்தியிருந்தபோதும், இந்த நகர்வுக்கு முன்பாக, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர் கிறிஸ் ஸ்மோலிங் ஓவ் சைட்டில் இருந்ததாக அறிவிக்கப்பட, இறுதியில் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையானது.

இப்போட்டிக்கு முன்பாகவே, கடந்த சனிக்கிழமை பயிற்சியின்போது மத்தியகள வீரர் நெமஞ்சா மட்டிக்கை காயம் காரணமாக இழந்திருந்த மன்செஸ்டர் யுனைட்டெட், இப்போட்டியின்போது காயம் காரணமாக அன்டர் ஹெரேரா, ஜுவான் மத்தா, ஜெஸி லிங்கார்ட் என மேலும் மூன்று மத்தியகளவீரர்களை இழந்திருந்தது. அந்தவகையில், முன்கள வீரர் மார்க்கஸ் றஷ்போர்ட் ஆரம்பத்தில் காயமடைந்திருந்தது போலத் தோன்றியபோதும் விளையாடியிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செளதாம்டனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் நான்காமிடத்துக்கு ஆர்சனல் முன்னேறியிருந்தது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, ஹென்றிக் மிகித்தரயான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .