2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராட்டம்

Mithuna   / 2024 ஜனவரி 03 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் இரண்டு அணிகளும் முன்னிலைக்கு போராடி வருகின்றன.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோற்று தொடரை இழந்துள்ள நிலையில், சிட்னியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் ஷண் மசூட் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

பாகிஸ்தான் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் மேற்கொண்ட சைம் அயூப், இமாம்-உல்-ஹக்கைப் பிரதியிட்டதோடு, ஓய்வளிக்கப்பட்ட ஷகீன் ஷா அஃப்ரிடியை சஜிட் கான் பிரதியிட்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே அப்துல்லா ஷபிக், அயூப்பை மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட்டிடம் இழந்தது. பின்னர் மசூட்டும், பாபர் அஸாமும் இணைந்து இனிங்ஸை நகர்த்திய நிலையில் அணித்தலைவர் கமின்ஸிடம் 26 ஓட்டங்களுடன் பாபர் அஸாம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த செளட் செளகீலும் சிறிது நேரத்திலேயே கமின்ஸிடம் வீழ்ந்தார்.

பின்னர் மசூட்டும், மொஹமட் றிஸ்வானும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 35 ஓட்டங்களுடன் மிற்செல் மார்ஷிடம் மசூட் வீழ்ந்தார். தொடர்ந்து றிஸ்வானும், அப்துல்லா ஷஃபிக்கும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 88 ஓட்டங்களுடன் கமின்ஸிடம் றிஸ்வான் வீழ்ந்தார். குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்து வந்த சஜிட் கான் கமின்ஸிடமும், அக்ஹா சல்மான் 53 ஓட்டங்களுடன் ஸ்டார்க்கிடமும், கமின்ஸிடம் ஹஸன் அலியும் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

இதன் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஆமிர் ஜமால் இறுதியில் 82 ஓட்டங்களுடன் நேதன் லையனிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 313 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி ஆறு ஓட்டங்களை முதல் நாள் முடிவில் பெற்றுள்ளது. களத்தில் டேவிட் வோர்னர் ஆறு ஓட்டங்களுடனும், உஸ்மான் கவாஜா ஓட்டமெதுவும் பெறாமலுமுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .