2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மெஸ்ஸியால் செவியாவை வென்றது பார்சிலோனா

Editorial   / 2019 பெப்ரவரி 24 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், செவியா அணியின் மைதானத்தில், நேற்று இடம்பெற்ற, அவ்வணியுடனான போட்டியில் இரண்டு தடவைகள் பின்தங்கியிருந்தபோதும் மீண்டு வந்து, தமது அணித்தலைவர் லியனல் மெஸ்ஸியால் பார்சிலோனா வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில், மெஸ்ஸியின் பிறீ கிக்கொன்று, அவரின் சக மத்தியகள வீரர் சேர்ஜியோ புஷ்கட்ஸை அடைந்து, அவர் அதை சக முன்கள வீரர் லூயிஸ் சுவாரஸிடம் வழங்கியபோதும் அவர் அதை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, செவியாவின் முன்கள வீரர் விஸாம் பென் யெடரின் கோல் கம்பத்தை நோக்கிய உதை தடுக்கப்பட்டது.

இந்நிலையில், விஸாம் பென் யெடர், அவரின் சக முன்கள வீரர் குயின்ஸி ப்ரோமேஸின் பங்களிப்புடன் வந்தை, அவர்களின் சக முன்கள வீரரான ஜெஸூஸ் நவாஸ், போட்டியின் 22ஆவது நிமிடத்தில் கோலாக்க, செவியா முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த நான்காவது நிமிடத்தில், சக மத்தியகள வீரர் இவான் றகிட்டிச்சிடமிருந்து வந்தை பந்தைக் கோலாக்கிய மெஸ்ஸி, கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர், முதற்பாதி முடிவடைய மூன்று நிமிடங்களிருக்கையில், பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகனின் உதை, செவியாவின் மத்தியகள வீரர் பப்லோ சரபியாவிடம் வர, அவர் அதை சக பின்கள வீரர் கப்ரியல் மெர்கார்டோவிடம் கொடுக்க, அவர் அதை கோலாக்க, செவியா மீண்டும் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், மெஸ்ஸியின் கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்று தடுக்கப்பட்டபோதும், சக முன்கள வீரர் உஸ்மான் டெம்பிலியிடமிருந்து பெற்ற பந்தை, 67ஆவது நிமிடத்தில் கோலாக்கிய மெஸ்ஸி, மீண்டும் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் கோல் கம்பத்தை நோக்கிய மேலுமொரு உதையை, செவியாவின் கோல் காப்பாளர் தோமஸ் வக்லிக் தடுத்திருந்தார்.

இந்நிலையில், போட்டி முடிவடைய ஐந்து நிமிடங்களிருக்கையில், சக மத்தியகள வீரரான கார்லஸ் அலெனா கோல் கம்பத்தை நோக்கிய உதைந்த உதை, தோமஸ் வக்லிக்கால் தடுக்கப்பட்டு மெஸ்ஸியிடம் வர அதை மெஸ்ஸி கோலாக்கியதோடு பார்சிலோனா முன்னிலை பெற்றது. பின்னர், போட்டியின் இறுதிக் கணங்களில் மெஸ்ஸி வழங்கிய பந்தை, அவரின் சக முன்கள வீரரான லூயிஸ் சுவாரஸ் கோலாக்க, இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .