Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், ஒலிம்பிக்கை இம்முறை நடாத்தும் நாடான பிரேஸிலுக்கு நேமர், தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
உலகக் கிண்ண சம்பியன்களான ஜேர்மனியை பெனால்டியில் தோற்கடித்தே, ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் முதன்முறையாக பிரேஸில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதற்கு முன்னர், 1984, 1988, கடந்த 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தபோதும் இறுதிப் போட்டிகளில் பிரேஸில் தோல்வியைத் தளுவியிருந்தது.
போட்டியின் முதற்பாதியில் கிடைக்கப் பெற்ற ‘பிறீ கிக்’கை 23 யார் தூரத்திலிருந்து பிரேஸில் அணிக்குத் தலைமை தாங்கிய நேமர் அபாராமாகக் கோலாக்கி தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். குறித்த கோலுடன் முதற்பாதியின் முடிவில் பிரேஸில் முன்னிலையில் இருந்தது. எனினும் ஜேர்மனி அடித்த பந்துகள் மூன்று தடவைகள் கோல்கம்பத்தில் பட்டுச் சென்றதுடன், கோலாகாதது பிரேஸிலுக்கு கிடைத்த அதிர்ஷடம் என்றே கூறலாம். பின்னர் இரண்டாவது பாதியில் மக்ஸ் மேயர் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கையை ஜேர்மனி சமப்படுத்தியது. அதைத் தொடர்ந்த போட்டியின் வழமையான நேரம், தொடர்ந்த மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், பெனால்டி மூலம் தங்கப் பதக்கம் பெறும் அணி தீர்மானிக்கப்பட்டது.
பெனால்டியில், ஜேர்மனியினதும் பிரேஸில் அணியினதும் முதல் நான்கு வீரர்களும் கோல்கம்பத்துக்குள்ளேயே பந்தைச் செலுத்த 4-4 என்ற நிலையில் சமநிலையுடன் காணப்பட்டது. தொடர்ந்த ஜேர்மனியின் ஐந்தாவது பெனால்டியை அடித்த நில்ஸ் பீற்றர்சனின் பெனால்டியை பிரேஸில் அணியின் கோல்காப்பாளர் வெவெர்ற்றன் தடுக்க, அடுத்த பெனால்டியை பிரேஸில் உள்ளே அடித்தால் பிரேஸிலுக்கு தங்கப் பதக்கம் என்ற நிலை காணப்பட்டது.
இந்நிலையில்,போட்டி இடம்பெற்ற மர்க்கானா அரங்கில் 78,000 பேர் முன்னிலையில், பிரேஸிலின் ஐந்தாவது பெனால்டியை அடித்த நட்சத்திர வீரர் நேமர், எவ்வித தவறும் செய்யாமல் கோலாக்க, பிரேஸில் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டது.
கருத்துத் தெரிவித்த பிரேஸில் அணியின் கோல்காப்பாளர் வெவெர்ற்றன், தங்கம் தங்களுடையது என்றும் ஆனால் அது கடவுளுக்கு உரியது என்றும் இந்த முழு அணியையும் கடவுள் விரும்புவது போல் நேமரையும் விரும்கிறார் எனக் கூறினார்.
கருத்துத் தெரிவித்த நேமர், தனது வாழ்க்கையில் இடம்பெற்ற சிறந்த விடயங்களில் இதுவொன்று. அவ்வளவுதான் என்று கூறினார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 3-2 என்ற கோல்கணக்கில் ஹொண்டூரஸைத் தோற்கடித்த நைஜீரியா, றியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனது முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொண்டது.
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
19 minute ago
35 minute ago