2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விலக வைக்கப்பட்ட கோலி?

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 23 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து கடந்த வாரம் விராட் கோலி விலகியிருந்தார்.

இந்த கோலி அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும் படலமானது நான்கு மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து இந்திய அணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து கோலி விலகுவதாக அறிவித்ததிலிருந்து ஆரம்பமாகியிருந்தது.

ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து சிறந்ததொரு அணித்தலைவராகவே கோலி காணப்படுகின்றபோதும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் உலகக் கிண்ணம், உலக இருபதுக்கு – 20, சம்பியன்ஸ் கிண்ணம் என எவையையும் வெல்லாமல் இருந்தது கோலிக்குரிய பின்னடைவாகவே காணப்பட்டிருந்தது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ஒட்டுமொத்த முடிவுகளை நோக்கும்போது சிறந்ததொரு அணித்தலைவராகவே கோலி காணப்படுகின்றார். எவ்வாறாயினும், விலகல் முறையில் அமையும் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் தோற்பது பின்னடைவாகவே நோக்கப்படுகிறது.

இதற்கான பெரும் காரணமாக கோலிக்கு முன்னர் அணித்தலைவராகவிருந்த மகேந்திர சிங் டோணியின் உலகக் கிண்ண, உலக இருபதுக்கு – 20, சம்பியன்ஸ் லீக் வெற்றிகளும் காரணமாய் இருப்பதோடு, இந்திய அணியின் மோசமான மத்திய வரிசையும் ஒரு காரணமாய் காணப்படுகின்றது.

கோலி, றோஹித் ஷர்மா, ஷீகர் தவானிலேயே 75 சதவீதத்துக்கும் மேலாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா கோலியின் காலத்தில் தங்கியிருந்ததோடு, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் தவானுக்குப் பதிலாக இதில் லோகேஷ் ராகுலைப் பிரதியிடக் கூடியதாகக் காணப்பட்டிருந்தது.

ஆக, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் உலகக் கிண்ணம், உலக இருபதுக்கு – 20, சம்பியன்ஸ் லீக்கில் வெற்றியைப் பெற முடியாமைக்கு கோலியை மாத்திரம் காரணமாய் சொல்லிவிட முடியாது.

ஆயினும், டோணி, றோஹித் ஷர்மா ஆகியோருடன் ஒப்பிடுகையில் தலைமைத்துவ நுட்பங்களில் கோலி சற்றுக் குறைவாகக் காணப்படுகின்றார்.

எவ்வாறெனினும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் அபரிதமான வளர்ச்சிக்கு கோலி என்ற தனிமனிதன்தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில், கோலி ஒரு மூலோபயமான அணித்தலைவராக இல்லா விட்டால் கூட தன்னிடமிருந்து 100க்கு 120 சதவீத அர்ப்பணிப்பை வழங்குவது போல ஏனைய வீரர்களிடமிருந்தும் அதை எதிர்பார்ப்பவர்.

அந்தவகையில், இந்திய அணியானது அவுஸ்திரேலியாவில், மேற்கிந்தியத் தீவுகளை இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றமைக்கு, இங்கிலாந்தில் தொடரில் முன்னிலை வகிப்பதற்கு தன்னுடைய அணியைக் கூட்டிணைவாக கட்டியெழுப்பி செயற்படுத்திய முழுவதும் கோலியே காரணமாவார். 68 போட்டிகளில் 40 வெற்றிகளை கோலி பெற்றுக் கொடுத்திருந்ததுடன், 17 தோல்விகளையே பெற்றதோடு, 11 வெற்றி தோல்வியில்லாத முடிவுகளைப் பெற்றிருந்தார்.

முக்கியமாக மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்துவீச்சுக் கூட்டணியை கட்டியெழுப்பியமைக்கு கோலியே பிரதான காரணமாவார். வெளிநாடு தவிர, உள்நாட்டிலும் உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ் மூலம் மிகச் சிறப்பாகச் செயற்பட்டதோடு, இரவிச்சந்திரன் அஷ்வினிடமிருந்து முழுப் பெறுபேற்றையும் பெற்றமைக்கு கோலியே காரணமாவார்.

இந்நிலையில், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியாவில் தொடர்களை வெல்வதற்கு கோலியின் உப அணித்தலைவர் அஜின்கியா ரஹானே, செட்டேஸ்வர் புஜாராவை உள்ளடக்கிய மத்திய வரிசையே காரணமாயிருந்தது.

இதுவே அண்மைய காலங்களில் கோலி உட்பட இந்த மத்தியவரிசை பிரகாசிக்காத காரணங்களால் பின்னடைவை எதிர்நோக்கியிருந்த இந்தியா பந்துவீச்சாளர்கள், றோஹித் ஷர்மா, றிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர், வொஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பின்வரிசை வீரர்களாலேயே சமாளித்திருந்தது.

அந்தவகையில், கடந்த இரண்டாண்டு மேலாக சதத்தைப் பெறத் தடுமாறி வரும் கோலி, அணித்தலைமைப் பொறுப்பு என்ற அழுத்தத்திலிருந்து விலகி துடுப்பாட்டத்தில் கவனஞ் செலுத்தும் முகமாகவே அணித்தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகியதாகத் தோன்றலாம்.

எவ்வாறாயினும், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து கோலி விலகியதும், அவரை விலக வேண்டாம் எனக் கோரியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் செளரஃப் கங்குலி தெரிவித்திருந்த நிலையில், இதை கோலி மறுத்திருந்தார்.

தவிர, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிக்கான தலமைப் பொறுப்பிலிருந்து கோலி விலக்கப்பட்ட நிலையில், தன்னுடன் கலந்துரையாடப்படாமல் அணிக் கூட்டத்துக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பாகவே தனக்கு அறிவிக்கப்பட்டதாக கோலி தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், கட்டுப்பாட்டுச் சபையுடன் கோலியுடன் பூசல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்த நிலையில் வளர்ந்து வரும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்வியைத் கோலியின் அப்பதவிக்கும் ஆப்பு வைக்கப்படலாம் எனக் கருதப்பட்ட நிலையிலேயே டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைமைப் பொறுப்பிலிருந்தும் கோலி பதவி விலகியிருக்கின்றார்.

கோலிக்கு 33 வயதாகின்ற நிலையில் அடுத்த நிலைத் தலைவரொருவரை வளர்த்தெடுத்து அவரிடம் அணியைக் கையளிப்பதற்கான காலம் சரியென்றபோதும், டெஸ்ட் போட்டிகளிலும் சரி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் சரி கோலியின் வயதையொத்த உப தலைவர்களே காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சரி இளம்வீரரொருவரை வளர்த்தெடுக்க இரண்டு ஆண்டுகள் போதுமென்றபோதும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைமைப் பொறுப்பை றோஹித் ஷர்மாவுக்கு வழங்கியது போல டெஸ்ட் போட்டிகளுக்கும் அவரையே அணித்தலைவராக நியமிப்பதே தற்போதையே சிறந்த தெரிவாக உள்ளது.

ஆயினும் கோலியின் அணியானது உச்சத்தை அடைவதற்கு சமரசமில்லாத உடற்றகுதி மட்டங்களே காரணமாயிருந்த நிலையில், ஷர்மாவின் உடற்றகுதி பிரச்சினைக்குரியதொன்றாகக் காணப்படுகின்றது.

அடுத்து ராகுலைப் பொறுத்தவரையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட், முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அணியைக் கூட்டிணைக்காமல் தனித்தவராகவே அவர் காணப்பட்டிருந்தார். றிஷப் பண்ட்டுக்கு அனுபவம் போதாதென்பதோடு, இரவிச்சந்திரன் அஷ்வின் சில வெளிநாடுகளில் இடம்பெறும் போட்டிகளில் பதினொருவர் அணியில் இடம்பெறுவதில்லை என சிக்கலாகக் காணப்படுகின்றது.

தவிர, உப அணித்தலைவராக இருந்த ரஹானே அணியிலேயே இல்லாமல் இருக்கும் நிலைக்கு உள்ளாகியிருந்தார்.

இந்நிலையில், கோலியைச் சமதானப்படுத்தி மீண்டும் அவரையே அணித்தலைமைப் பொறுப்பை டெஸ்ட் போட்டிகளில் ஏற்கச் செய்தால் அதனால் நன்மை அடையப் போவது இந்திய கிரிக்கெட் அணியே ஆகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .