2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஸ்பெய்னினதும் றபாடாவினதும் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா பாகிஸ்தான்?

Editorial   / 2018 டிசெம்பர் 26 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து - இலங்கை, அவுஸ்திரேலியா - இந்தியா என, முக்கியமான இரண்டு டெஸ்ட் போட்டிகள், இன்று அதிகாலையிலேயே ஆரம்பித்த போதிலும், இன்னுமொரு டெஸ்ட் போட்டியும், முக்கியமான கவனத்தை ஈர்த்துள்ளது. தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரே, இன்று (25) ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, செஞ்சூரியன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு, இப்போட்டி ஆரம்பமாகும்.

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், அந்நாட்டின் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக இப்போட்டியில் மாறுவாரென எதிர்பார்க்கப்படும் நிலையில், முழுக் கவனமும் அவர் மீது காணப்படுகிறது. இதுவரை 88 டெஸ்ட்களில் விளையாடி 421 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், 108 போட்டிகளில் விளையாடி, 421 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷோன் பொலக்கின் விக்கெட் எண்ணிக்கையைத் தாண்டிச் செல்லும் போது, தென்னாபிரிக்காவின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்ற பெயரை, உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவார்.

அண்மைய சில மாதங்களாக, உபாதைகள் காரணமாக, ஏராளமான போட்டிகளைத் தவறவிட்டுள்ள ஸ்டெய்ன், முழு உடற்றகுதியோடு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளதோடு, ஓய்வுபெறுவதற்கான திட்டங்கள் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே, பாகிஸ்தானுக்கான முக்கியமான சவாலாக அவர் அமைவார்.

மறுபக்கமாக, அண்மைக்காலத்தில் அந்நாட்டின் நட்சத்திரமாக மாறியுள்ள கஜிஸோ றபாடா, ஸ்டெய்னோடு இணைந்து, என்ன செய்வாரென்பதும், அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக உள்ளது. உலகின் முதல்நிலைப் பந்துவீச்சாளரான றபாடாவே, பாகிஸ்தானை அதிகம் அச்சுறுத்துவார் எனக் கருதப்படுகிறது.

இவ்வாறு, வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், பல வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்துள்ளமை, இத்தொடருக்குப் பாதிப்பாக அமைந்துள்ளது. தென்னாபிரிக்கா சார்பாக வேர்ணன் பிலாந்தர், லுங்கி இங்கிடி ஆகியோர் காயமடைந்து, இத்தொடரில் பங்குபற்ற மாட்டார்கள். மறுபக்கமாக, உலகின் முதல்நிலைப் பந்துவீச்சாளராக வருவாரென, ஸ்டெய்னால் எதிர்வுகூறப்பட்ட, பாகிஸ்தானின் மொஹமட் அப்பாஸ், முதலாவது போட்டியில் பங்குபற்ற மாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை, பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதிலேயே, இத்தொடரின் முடிவு தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செஞ்சூரியன் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்குப் பெயர்போனது என்பதால், துடுப்பாட்ட வீரர்களுக்குத் தான் சோதனை காத்திருக்கிறது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .