2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய ரூ.250 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேசியப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 250 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

பரீட்சைகளில் திறமை காட்டிய மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்,  ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலய மாணவர்களைக் கௌரவித்து பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு, உதவும் கரங்கள் நிறுவனத்தின் அனுசரணையில் வித்தியாலய அதிபர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் வியாழக்கிழமை (25) பாடசாலையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து பேசிய மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மேலும் கூறியதாவது,

'மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை கட்டி எழுப்புவதிலே கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பின்னர், மாவட்டச் செயலகத்தினால் கடந்த 2013ஆம் ஆண்டு வரை 500 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்னமும் அதிக பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே 125 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். இது மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதமாகும். வயதுக் கட்டமைப்பிலே இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்காலம், இந்த மாணவர்களும் அவர்களது கல்வியும்தான். எனவே, இந்த மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும். இது அனைவரதும் பொறுப்பாகும். அந்த மாணவர்களுக்கு கல்வி போதிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,175 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்ற ஏறாவூர் ஆறுமகத்தான் குடியிருப்பு பாடசாலையில்  முதன் முறையாக உயர் தராதரத்தை பெற்று இந்தப் பாடசாலைக்கு சரித்தரித்தில் பெருமை தேடித் தந்த மாணவி மிகவும் வறிய நிலையில் ஒலைக் கொட்டிலிலே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு ஒரு வீட்டு வசதியைப் பெற்றுத்தருமாறும் என்னிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை நான் கரிசனைக்கு எடுப்பேன். அந்த மாணவிக்கு வீட்டு வசதி பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வருடம் தேசியப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 250 மில்லியன் ரூபாய் செலவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்திலே அபிவிருத்தி செய்வதற்கு சில பாடசாலைகளை முன்னுரிமைப்படுத்தி வைத்துள்ளோம்.

ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தின் குறைபாடுகளை நேரில் பார்த்தவன் என்கின்ற அடிப்படையில் அந்தக் குறைபாடுகளைப்  பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்பதை உறுதியளிக்கின்றேன்' என்றார்.

இந்நிகழ்வில், க.பொ.த.சாதாரண தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய பரீட்சைகளில் தமது புலமையை வெளிப்படுத்திய 22 மாணவர்களுக்கு பாராட்டும் கௌரவமும் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.ஞானம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம், செங்கலடி கொமேர்ஷல் வங்கி முகாமையாளர் முஹம்மத் றிஸ்னி ஆகியோருடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X