2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

'தெங்குச் செய்கையாளர்களுக்கு 20 இலட்ச ரூபா வரை கடன் திட்டங்கள்'

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலப்பரப்பில் தெங்குச் செய்கையில் ஈடுபவர்களுக்கு 50 ஆயிரம்  ரூபாவும் அதிகபட்சம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தெங்குச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு 20 இலட்ச ரூபா வரையும் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன' என்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெங்கு அபிவிருத்தி தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய அலுவலக அதிகாரி பெருமள் உதயன்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெங்கு அபிவிருத்தி தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய அலுவலகமானது, தென்னை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடன் உட்பட அதிகளவிலான ஊக்குவிப்புக்களை வழங்கி வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

தெங்கு உற்பத்தியில் ஈடுபட ஆர்வமுள்ளோருக்கான சலுகைகள் மற்றும் வசதிவாய்ப்புக்கள் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,

'மைலம்பாவெளியிலுள்ள தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை அலுவலகத்திற்கூடாக இந்த வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலி மற்றும் கிணறு அமைத்தல், தெளிப்பு நீர்ப்பாசனம், சொட்டு நீர்ப்பாசனம், நீர்க்குழாய் கொள்வனவு, நீர்க்குழாய் பொருத்துதல்,  நீர் பாய்ச்சல் முறைமை போன்றவற்றுக்காகவும்  தென்னை நடவு, கலப்புத் தென்னை நடவு, வயது வந்த தாவரங்களுக்கான புனர்வாழ்வு மற்றும் ஊடுபயிர்ச் செய்கை, தென்னை மரத் தோட்டங்களிலேயே கால்நடை வளர்ப்பு, மற்றும் விவசாய உபகரணக் கொள்வனவு போன்ற பல்வேறு அபிவிருத்தி நோக்கங்களுக்காக இந்த வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.

10 சத வீத வருடாந்த வட்டி என்ற அடிப்படையிலேயே இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆயினும், இந்த வட்டித் தொகையில் 100 சத வீதத்தையுமே தெங்கு அபிவிருத்திச் சபையிலிருந்து கடன் பெற்ற ஒரு விவசாயி மீளப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தச் சலுகை வேறெந்த வங்கிகளிலும் இல்லை.

தெங்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவே இதனை தெங்கு அபிவிருத்திச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலம் ஐந்து வருடங்களாக உள்ளதும் தெங்கு உற்பத்தியளார்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தெங்கு அபிவிருத்தி நோக்கங்களுக்காக பல மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆயினும் இந்த நன்மைகளைப் பற்றி விவசாயிகள் அறிந்திராததன் காரணமாக இந்த நிதியின் பெரும்பகுதி திறைசேரிக்குத் திரும்புகிறது.

தெங்குச் செய்கையாளர்களால் செலுத்தப்பட்ட வட்டித் தொகையை மீளவும் அவர்களிடம் ஒப்படைப்பதற்கு தெங்கு அபிவிருத்திச் சபை தயாராக இருக்கின்றது.' என்றும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X