2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் போஷாக்கு மட்டம் மிகக் குறைவு

Kanagaraj   / 2014 ஜூன் 30 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் போஷாக்கு மட்டம் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. உடலளவில் ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் மாறுவோமாக இருந்தால் நாம் பொருளாதார ரீதியிலும் முன்னேற்றமடையலாம் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம் தெரிவித்தார்.
வந்தாறுமூலையில் உலக தரிசன இயக்கமும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய போஷாக்குணவு பற்றிய விழிப்புணர்வுக் கண்காட்சி இன்று நடைபெற்றது.

வேர்ள்ட் விஷன் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ரீ.ரொஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியிலும் கருத்தரங்கிலும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.எஸ். றஹுமான், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார தாதியர் சகோதரி சிவரதி ராஜசேகரா, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார சகோதரிகள், குடும்ப நல மருத்துவ மாதுக்கள், மலேரியா தடுப்டபு இயக்க உத்தியோகத்தர்கள். வேர்ள்ட் விஷன் நிறுவன பணியாளர்கள், கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம்;,
ஆரோக்கியமாக இருந்தால்தான் குழந்தை புத்திக் கூர்மையுள்ளதாக இருக்கும் இதற்குத் தாய் சேய் நலன் மிக முக்கியம். கர்ப்ப காலத்தில் தாயும் சேயும் போஷாக்கானவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.சவிச்சந்திரன்,

தாய் சேய் நலனைப் பற்றியும் போஷாக்கான உணவுகள் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றியும் தொடர்ச்சியான விழிப்புணர்வுக் கண்காட்சிகளையும், கருத்தரங்குகளையும் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தி  வருகின்றோம்.

அத்தோடு சுகாதாரமான வாழ்க்கை முறை, வாழும் சூழல், பிரசவம், பிரசவத்திற்குப் பின்புள்ள நிலைமைகளில் தேகாரோக்கியத்தையும் அப்பியாசங்களையும் எவ்வாறு பேணிக் கொள்ளவேண்டும் என்பதற்காக இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலே போஷாக்கு மட்டம் குறைந்த கர்ப்பிணித் தாய்மார் உள்ளார்கள். கர்ப்பிணித் தாய்மாரையும் ஐந்து வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளையும்தான் நாங்கள் கணிப்பீடு செய்கின்றோம்.

போஷாக்கு சம்பந்தப்பட்ட விடயத்திலே பொதுவாக எல்லோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாமை என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக இந்த விடயத்திலே கர்ப்பிணித் தாய்மார் கூடிய அக்கறை எடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களைக் கடந்த குழந்தைகளுக்கு மற்ற உணவுகளைக் கொடுங்கள் என்று நாம் வலியுறித்தினால் கடையில் கிடைக்கும் நவீன உணவுகளையே  தாய்மார் நினைவு படுத்திக் கேட்கின்றார்கள்.

ஆனால் அவற்றில் ஆரோக்கியமும் போஷாக்கும் இருப்பதில்லை. எமது பாரம்பரிய உணவுகளில்தான் நிறை போஷாக்குக் கிடைக்கின்றது. விளம்பர உணவுகளைக் கண்டறிந்திராத எமது மூத்தோர் மிகத் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் தளராமல் இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களே காரணமாகும்.
இப்பொழுது 30 அல்லது 35 வயதைக் கடக்கும்போதே எத்தனையோ வகையான உடல் உபாதைகளுக்கு நாம் உள்ளாகின்றோம். இத்தகைய நிலைமைகளுக்கு முக்கிய காரணம் எமது நவீன உணவுப் பழக்கவழக்கங்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

போஷாக்குள்ள உணவுகளை பெரும் பணச் செலவு செய்து கடைகளில்தான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கையாகவே எமது சூழலில் கிடைக்கும் உணவுகளைக் கொண்டே நிறை போஷாக்கை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தாய்ப்பாலை விட பெட்டிப் பால் மாவையே தங்களது குழந்தைகளுக்கக் கொடுக்கிறார்கள். இது பற்றி எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அது அவர்களின் மனதில் ஆழப்பதிந்ததாகத் தெரியவில்லை.

புத்திக் கூர்மையும், சுறு சுறுப்பும், ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் தாய்ப்பாலில்தான் நிறைந்துள்ளது என்பதை அலுவலகங்களில் பணியாற்றும் தாய்மார் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .