2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

11,000 சதுர கிலோமீற்றர் நிலமும் இல்லாமல் போவதற்குரிய வாய்ப்புள்ளது: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 


'எமது வட, கிழக்கு தாயகத்தில் 1766ஆம் ஆண்டுக்கு முன்னர் 26,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் இருந்தது. 1976ஆம் அண்டுக்குப் பின்னர் 11,700 சதுர கிலோமீற்றர் நிலம் இருந்தது. தற்போது 2014ஆம் ஆண்டு 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் மாத்திரமே உள்ளது.  இந்த 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலமும் 2020ஆம் ஆண்டு வருகின்றபோது இல்லாமல் போவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது' 

இவ்வாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (18) நடைபெற்றது. இதில் உரையாற்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இனம் வாழவேண்டுமாக இருந்தால், வாழ்வதற்கு நிலம் வேண்டும். நிலத்தை  தக்கவைக்கின்றபோதே,  இனத்தை  அடுத்த கட்டத்துக்கு  கொண்டுசெல்ல முடியும்.

அரசியல் என்பது வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கின்றது. அரசியல் இல்லாமல் கல்விப் பணிப்பாளரும் இல்லை. பாடசாலை மாணவர்களும் இல்லை. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியைத் தீர்மானிப்பதும் அரசியலே. எனவே, அரசியலும் வாழ்க்கையும் இணைந்திருக்கின்றது.

எமது இனத்தைக் காப்பாற்றவேண்டும். அதைத் தக்கவைக்கவேண்டும், அப்போதே சகல விடயங்களிலும் முன்னேற்றம் அடையலாம்.
மட்டக்களப்பு மண்ணில் அமைந்துள்ள கெவுளியாமடு, கரடியனாறு, சின்னவத்தை போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி, எமது தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்படுகின்றார்கள். இதனால்,  எமது நிலங்கள் பறிபோகின்றன.

எமது வட, கிழக்கு தாயகத்தில் 1766ஆம் ஆண்டுக்கு முன்னர் 26,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் இருந்தது. 1976ஆம் அண்டுக்குப் பின்னர் 11,700 சதுர கிலோமீற்றர் நிலம் இருந்தது. தற்போது 2014ஆம் ஆண்டு 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் மாத்திரமே உள்ளது.  இந்த 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலமும் 2020ஆம் ஆண்டு வருகின்றபோது இல்லாமல் போவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது

இதற்காகவே இங்கு வருகின்ற அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.  படுவான்கரைக்கு ஒரு அமைச்சர் தேவை என்று. ஏனென்றால், படுவான்கரையில் அமைந்துள்ள எமது தமிழ் மக்கள் வாழ்கின்ற நிலத்தை தாரை வார்ப்பதற்காகவே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற ஒரு கட்சி இலங்கையில் 2009 மே 19ஆம் திகதி உருவாகியிருக்காவிட்டால் எமது தாந்தாமலை, வெல்லாவெளி, வவுணதீவு போன்ற பிரதேசங்கள் இல்லாமல்போயிருக்கும்.

எங்கள் இனத்துக்கு, எங்கள் மண்ணுக்கு, எங்கள் மொழிக்கு, எங்கள் கலாசாரத்துக்கு எது வேண்டுமோ அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துகொண்டிருக்கின்றது.

வட, கிழக்கில் இருக்கின்ற பிராதான இரு மாவட்டங்களாக யாழ்ப்பாணமும் மட்டக்களப்பும் உள்ளன.  இலங்கையில் அதிகூடிய போதைவஸ்த்து பாவனை யாழ். மவாட்டத்திலும் அதிகூடிய மதுபானப் பாவனை மட்டக்களப்பு மாவட்டத்திலும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபிவிருத்திகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், பாதைகளை அபிவிருத்தி செய்வதால், நாங்கள் பாதைகளை மாற்றமுடியாது. எங்கள் மனங்களில், எங்கள் இனங்களில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. எங்கள், நிலங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எமது கலாசாரத்தை சீரழிப்பதற்காகவே  போதைவஸ்து,   மதுபானம்  கொண்டுவந்து குவிக்கப்படுகின்றன.
இவற்றைத்  தடுப்பதற்கு யாருக்கு முடியும்? இவற்றிலிருந்து விடுபடச் செய்வதற்கு  எமது கல்விமான்கள,  புத்திஜீவிகள், சிந்திக்க வேண்டும்'

மேலும், கல்வியை  வளர்த்துக்கொள்ளவேண்டுமாயின் கல்வித் திணைக்களம், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், ஆகியோரிடத்தில் மட்டும் தங்கியிருக்கமுடியாது. உலகமயாமாக்கல் கல்வி முறையில் எமது மாணவர்களை வழிநடத்தவேண்டுமாயின், மாணவர்களின் கல்விக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தால் மட்டுமே  சிறந்த கல்வியை எடுத்துச்செல்ல முடியும்.

இந்த நாட்டில்  3 இலட்சம் மாணவர்கள் இந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். இதில் 30,000 மாணவர்களே வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்றார்கள்.  ஏனைய மாணவர்களின் நிலை என்ன?  பெற்றோர் தங்களது பிள்ளைகளின்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு எவ்வாறு ஒத்துழைத்தர்களோ, அதுபோல் தொடர்ந்துவரும் பரீட்சைகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீதமான தமிழ் மக்கள் கல்வியில் பின்னோக்கியிருக்கின்றார்கள். இவர்களை முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட ஏனையோரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் 12 இலட்சம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இதில் சுமார் 10 இலட்சம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 2 இலட்சம் மக்கள்  கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய இடங்களையும் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். எமது இங்குள்ள தமிழ் மக்களுக்கு இவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகளே இவ்வாறு பல உதவிகளை நல்கிவருகின்றார்கள். அதிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே மட்டக்களப்பிலுள்ள மக்களுக்கு அதிகம் உதவுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகள் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை கட்டியெழுப்பி பல உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பை  பொறுத்தவரையில் கல்விக்காக அரும்பாடுபட்டு செயற்பட்டு வருகின்றோம். எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும்;  கல்விக்காகவே  அதிக ஒதுக்கீடுகளை மேற்கொண்டுவருகின்றோம். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மட். காக்காச்சுவட்டைக் கிராமத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட பாடசாலையை  தனியாக அமைத்துக்கொடுத்துள்ளனர். 

இது இவ்வாறிருக்க, பல ஆசிரியர்களின் இடமாற்றங்கள் கூட தற்போது கீழ்த்தரமான அரசியலைப் பயன்படுத்தி இடம்பெறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது,  கல்வியை  முறையாக முன்னெடுத்துச் செல்லவேண்டும், அதிகாரிகளை சுயமாக இயங்கவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது.  எங்கள் இனம் கல்வியில் முன்னேற வேண்டும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X