2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 12% இளவயதுத் திருமணம்: பொன்.செல்வராசா

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 28 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டம் மதுபான விற்பனை, வறுமை, இளவயதுத் திருமணம் போன்றவற்றில் முதலாவதாக உள்ளது என தெரிவித்துள்ள மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இலங்கையில் 6 வீதமாகக் காணப்படும் 18 வயதுக்கு கீழ்பட்ட இளவயதுத் திருமணத்தில் 12 சதவீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செல்வராசா எம்.பி, 'ஓய்வு நேரங்களை சரியான முறையில் இளைஞர்கள் பயன்படுத்தினால் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படாது. ஓய்வு நேரங்களை வீணாக்குவதனால் இளைஞர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் விளையாட்டுக் கழகங்களினுடாக விளைட்டுக்களில் தங்களது ஓய்வு நேரங்களை பயன்படுத்துவார்களாக இருந்தால் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படுவதுடன் தேக ஆரோக்கியமாகவும் சிறந்த உடல் வலிமை உள்ளவர்களாகவும் திகழ்வார்கள்' என்று சுட்டிக்காட்டினார்.

'வீணாக ஓய்வு நேரங்களை செலவிடுவதனால் மது அருந்துதல், தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபடுதல், இளவயதுத் திருமணத்தை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால் இன்று மட்டக்களப்பு மாவட்டம் மதுபான விற்பனையிலும் இளவயதுத் திருமணத்திலும் வறுமையிலும் முதலிடத்தில் உள்ளது.

மதுபாவனை அதிகரிப்பும் இளவயதுத் திருமணமுமே மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருக்கக் காரணம் எனலாம். 18 வயதுக்கு குறைந்த வயதுடையோர் இள வயதுத் திருமணத்தை மேற்கொள்வதனால் அவர்களால் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதனால் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளனர். அத்துடன் குறைந்த வயதில் கரப்;பம் தரிக்கின்ற போது நல்ல சீரான ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்' என்றார்.

'இதனால், மதுபாவனை அதிகரிப்பு, இளவயதுத் திருமணம், வறுமை என்பவற்றினுடாக எமது கல்வி வெகுவாகப் பாதிக்கின்றது. ஏனைய சமூகங்களுடன் போட்டி போட்டு முன்னேற வேண்டிய நிலையில் இன்று எமது சமூகம் உள்ளது. குறிப்பாக கல்வியில் பாரிய போட்டி நிலவுகின்றது.

கடந்த வருடம் இலங்கையில் வர்த்தகப் பிரிவில் 6,000பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றள்ளனர். இவர்களில் யார் பல்கலைக் கழகம் செல்வது என்றால் அதில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களே பல்கலைக் கழகம் செல்வார்கள். அப்படியானால் உச்சக்கட்டப் புள்ளியினை பெற எமது மாணவர்கள் நன்றாகக் கற்க வேண்டும்' என்றார்.

'2009ஆம் அண்டு நடாத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரிட்சையில் தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து எவரும் சித்தி பெறவில்லை காரணம் நாம் சற்று பின்தள்ளப்பட்டுள்ளோம். பின்னர் விசேட பரீட்சை ஒன்று தமிழ் பேசும் சமூகத்திற்காக நடாத்தப்பட்டது.தொடர்ந்து அவ்வாறு நடைபெற மாட்டாது.

ஏனைய சமூகத்துடன் போட்டி போட்டு முன்னேறுவதற்கு நாம் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி வீழ்ச்சி அடைய மதுபாவனையும் வறுமையுமே காரணமாக உள்ளது. மதுபாவனை குறைய வறுமை நிலை குறையும் மதுபாவனை அதிகரிக்க வறுமை நிலை அதிகரிக்கும்.

இவை குறைய வேண்டுமாக இருந்தால் இளைஞர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். சிறந்த சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும். அதற்கு விளையாட்டு அவசியம். நன்றாக விளையாட வேண்டும். நல்ல கல்வியையும் பெற வேண்டும்.

30 வருடங்களாக எமது சமூகம் நொந்தவர்கள் மீண்டும் ஒளிர்ச்சி பெற வேண்டுமாக இருந்தால் எழுச்சி பெற வேண்டும். சாதனை படைக்கும் இளைஞர்களாக தமிழ் இளைஞர்கள் மாற வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X