2025 மே 12, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் இன்னமும் 12,000 வீடுகள் தேவை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும்  12,000 குடும்பங்கள்  வீடுகளின்றி நிர்க்கதி நிலையிலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் ஏற்பாட்டில்  ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி, பெரியமடுவில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கான மனிதாபிமான உதவித் திட்டத்தின்  கீழ், 20 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ.மயூரன் தலைமையில் கிராமிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற அனர்த்தங்கள் காரணமாக, மிக மோசமாக மக்களின் வாழ்விடங்களே பாதிக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம், யுத்தம் மற்றும் சுனாமி காரணமாக சேதமான  சுமார் 23,000  வீடுகளில் 11,000 வீடுகளை  நிர்மாணித்து  மக்களிடம் நாம் கையளிக்க முடிந்தது.

இவ்வருடத்தில் 4,400 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.  இந்நிலையில்,  இந்திய அரசாங்கத்தினுடைய உதவியின் கீழ் 2,500 வீடுகளும் யூ.என்.ஹபிடாற்  உதவியின் கீழ் 1000 வீடுகளும் ஏனைய 1000 வீடுகள் சுவீடன் கூட்டுறவு நிலையம் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் எமது மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன.

இதனை விட, இன்னமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள 8,000 குடும்பங்களுக்கு  வீட்டு வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய தேவை  உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், மேலும் 1,500 வீடுகளைக் கட்டிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.  அத்துடன், யூ.என்.ஹபிடாட்டின் 02ஆம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் 1000 வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைத்துக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இவை கிடைக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ளவர்களுக்கான வீட்டுத் தேவைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பூர்த்தி செய்யலாமென்று எண்ணுகிறோம்.

தங்களுக்கு வீடு கிடைக்காத பொதுமக்கள் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு வீடு கிடைக்கவில்லையென்ற காரணத்துக்காக, கிராம அலுவலகருடனோ அல்லது பிரதேச செயலாளருடனோ அல்லது உதவி நிறுவன அதிகாரிகளுடனோ முரண்பட்டுக்கொள்ளக் கூடாது. உங்களுக்காக முன்வந்து இக்கிராமத்தைத் தெரிவுசெய்து வீடமைப்பை மேற்கொண்டு வருகின்ற சுவீடன் கூட்டுறவு நிலையத்திற்கு நீங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாய் இருப்பதோடு, அவர்களது வீடமைப்புத் திட்டம் முழுமையாக வெற்றி பெற பொதுமக்களாகிய நீங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.கெங்காதரன், சுவீடன் கூட்டுறவு நிறுவன கணக்காளர் எஸ்.லெவனா, சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எம்.நவறஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X