2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் 138 குடும்பங்களுக்கு உதவி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


பாரம்பரிய கைவினை கைத்தொழில் கிராம கருத்திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் 138 குடும்பங்கள் வேலைத்தளங்களை அமைப்பதற்காக தலா குடும்பத்துக்கு 20,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டதாக தேசிய வடிவமைப்பு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.வி.பண்டார தெரிவித்தார்.

தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக் குடும்பத்துக்கும் சீமெந்து, மணல், பி.வி.சி. குழாய், இரும்புக்கம்பிகள், கருங்கற்கள்  ஆகியன வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள செங்களி வடிவமைப்பாளர் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நிகழ்வில் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.வி.பண்டார, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பிரியதர்ஷினி மதன், மட்பாண்ட பயிற்சிப் போதனாசிரியை எஸ்.பரஞ்சோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மட்பாண்ட கைவினை பொருட்கள் செய்வோரை ஊக்குவிக்கும் உதவித்திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் நான்காம், ஐந்தாம் குறிச்சிக் கிராமங்கள், ஐயன்கேணி, எல்லை வீதி, கொம்மாதுறை, பன்குடாவெளி ஆகிய கிராமங்களில் மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் 138 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நவீன மற்றும் தரம்வாய்ந்த மட்பாண்ட உற்பத்திப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக   பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பிரியதர்ஷினி மதன் தெரிவித்தார்.

பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர்  கே.தங்கேஸ்வரியின் வேண்டுகோளின் பேரில், பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கில் பாரம்பரியக் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான இந்தத்திட்டத்துக்;கு 38 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X