2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்பில் 145.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 25 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி,-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,-ஜவீந்திரா, கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 145.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை காலை தொடக்கம் இன்று காலை 5. 30 மணிவரை இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தாழ்நிலப் பிரதேசங்களில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல வீடுகளுக்குள்ளும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும்  நவகிரி, உன்னிச்சை மற்றும் உறுகாமம் குளங்கள் நிரம்பி வழிவதால் அவற்றின் வான்கதவுகளும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன.

நவகிரிக்குளத்தின் ஒரு வான்கதவு 4 அடி உயரத்தில் திறந்தது விடப்பட்டுள்ளதாகவும் இக்குளத்தில் மேலும் 2 அடி நீர் மேலதிகமாக வெளியேறுவதாகவும் இக்குளத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் எஸ்.ஹேமகாந் தெரிவித்தார்.

உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இக்குளத்தில் 3 அடி உயரத்தில் மேலதிகமாக வெளியேறுவதாகவும்  உன்னிச்சைக் குளத்தில் 3 வான்கதவுகள் 10 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும்  இக்குளத்தில் 1 அடி 2 அங்குல உயரத்தில் மேலதிக நீர் வெளியேறுவதாகவும் இக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர் ஏ.கிருஷாந்தன்  தெரிவித்தார்.

படுவான்கரைப் பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி வீதி, பாலையடிவட்டை – வெல்லாவெளி வீதி, ஆகியன மழை வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. இதனால் இப்பிரதான வீதிகளின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. சின்னவத்தை, ஆனைகட்டியவெளி, நாதனைவெளி, வேத்துச்சேனை ஆகிய கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இக்கிராமங்களிலுள்ள பொதுமக்கள் எதுவித போக்குவரத்துக்களும் இன்றி  காணப்படுகின்றனர்.

வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள றாணமடு மற்றும் வேத்துச்சேனை கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .