2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேலை தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மோசடி: மூவர் கைது

Gavitha   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் பெயரைப்பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி இளைஞர் யுவதிகளிடமிருந்து பெருந்தொகை பணத்தை பெற்ற மூவரை மட்டக்களப்பு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (3) கைது செய்துள்ளனர்.

இச்சம்வம் குறித்து தெரியவருவதாவது,

சந்தேக நபர்கள் மாகாண சபை உறுப்பிரின் மாதிரிப் போலி கையேட்டினைப் பயன்படுத்தி  அமைச்சர் குமாரவெல்கம மூலம் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி 7 இளைஞர்களிடம் சுமார் 20 இலட்சம் ரூபாய் பணத்தொகையை பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த இளைஞர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று அங்கு போலி நியமனக்கடிதம் வழங்கி மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நியமனம் கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, மட்டக்களப்பில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு வேலை சம்பந்தமாக தெரிந்துக்கொள்ளும் பொருட்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அலுவலகத்தில் வழங்கிய தகவலின் பிரகாரம் தாம் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்ததையடுத்து தாம் ஏமாற்றப்பட்ட சம்பவத்தை, மாகாணசபை உறுப்பினர் சந்திரகாந்தனின் கவனத்துக்கு பாதிக்கப்பட்டோர் தெரியப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தம்பிராசா பாலசிங்கம் (சிறி), குமார் குமரேஷன், எம். கரீம் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

ஆயர்வேத வைத்தியசாலை, புகையிரதநிலையம், ரெலிகாம் ஆகிய இடங்களில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஒவ்வொரு நபர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் தொடக்கம் 4 லட்சம் வரையிலான பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இச்சம்பவம் பற்றி மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு மாகாண சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவரது பெயரைக் களங்கப்படுத்தும் இவ்வாறான ஏமாற்றுப்பேர் வழிகள் தொடர்பாக தெரிந்தால் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X