2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செக்கனுக்கு 4 பேருக்கு மாரடைப்பு: வைத்தியர் ஜாபீர்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்;.எஸ்.எம்.நூர்தீன்


தற்போது உலகில்  ஒரு செக்கனுக்கு 04 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது என்று  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர், டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

உலக இருதய தினம்  செப்டெம்பர் 29ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.

உலக இருதய தினத்தையொட்டி இது தொடர்பான விழிப்புணர்வூட்டல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மாரடைப்பானது புகைப்பிடித்தல்; மற்றும் மதுபானப் பாவனையால் அதிகம் ஏற்படுகின்றது. அத்துடன் குடும்பப் பரம்பரை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, உடற்பருமன் ஆகியவற்றினாலும்  மாரடைப்பு ஏற்படுகின்றது. இந்நிலையில்,  புகைப்பிடிப்பதையும் மதுபானப் பாவனையை தவிர்ப்பதன் மூலம் மாரடைப்பை சற்றுத் தடுக்கமுடியும்.

மனிதன் பிறந்ததிலிருந்து அவனுக்கு நோய்க்கு உள்ளாகின்றான்.  இரண்டு காரணிகளால் நோய் ஏற்படும். அவற்றிலொன்று பரம்பரை.  மற்றையது எமது சூழல் ஆகும். 

சுகமாக வாழவேண்டுமென்றிருந்தால் எமது டி.என்.ஏ எனப்படும் மரபனுக்களை பாதுகாக்க வேண்டும்.

புகைப்பிடிப்பதை  நாகரிகமென்று ஏற்றுக்கொள்ளமுடியாது. சமூகத்தில் புகைப்பிடிப்பதை இல்லாமல் செய்வதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளமுடியும். மேலும், புகைப்பிடிப்பதினால் புகைப்பிடிப்பவருக்கு மாத்திரமின்றி, அருகிலிருந்து அதை சுவாசிப்பவருக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. 

மாரடைப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி  செய்தல், மரக்கறிகளை உட்கொள்ளுதல், எமது உடல் மரபனுக்களை பரிசோதனை செய்தல்  போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரசாயன மருந்துகள் அடிக்கப்பட்ட மரக்கறிகள் உட்கொள்வதை தவிர்த்து,  நாம் வீட்டுத்தோட்டம் செய்து இயற்கை பசளை கொண்டு உற்பத்திசெய்யப்பட்ட மரக்கறிகளை உட்கொள்ள வேண்டும்' என்றார்.

இந்த விழிப்புணர்வூட்டல் நிகழ்வின்போது, இருதயப் பரிசோதனைக் கருவிகள் சரண்டிப் நிறுவனத்தால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை (29) கையளிக்கப்பட்டன.

ஈ.சி.ஜி. கருவி மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் இரத்த அழுத்தமானி, இருதய நாடித்துடிப்பை கணிக்கும் கருவி ஆகியன கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X