2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் பயன்படுத்தப்படாதுள்ள 700 அரச கட்டடங்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்பட்ட 700 அரச கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சித்திணைக்களத்தின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு சனிக்கிழமை  (28) மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்பட்ட 700 அரச கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமலுள்ளன. இக்கட்டடங்கள் அனைத்தும் புதிய கட்டடங்களாகும். இந்தக் கட்டடங்களை எனது உத்தியோகத்தர்களைக் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளேன். கட்டடங்கள் கட்ட வேண்டுமென்பதற்காக கட்டப்பட்டுள்ளதே தவிர, சரியான திட்டமிடலுடன் இந்தக் கட்டடங்கள் கட்டப்படவில்லை.

இதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் இன்று சமூக குற்றங்களை இழைக்கும் இடங்களாக மாறியுள்ளன.

சுனாமிக்காக வீடுகளை பெற்றுக்கொண்ட அந்த வீட்டு உரிமையாளர்கள் நகர்ப்புறங்களில் மாடி வீடுகளில் வசித்து வருவதுடன், அவர்களுக்குரிய சுனாமி வீட்டை  வாடகைக்கு கொடுத்துள்ளனர். இவ்வாறான வீடுகளில் இன்று இந்த சமூக குற்றங்கள் இழைக்கப்படுகின்றன.

மேலும், இம்மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரண உணவு முத்திரைக் கொடுப்பனவு சில தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதனால், இதனை பரிசீலனை செய்வதற்காக நான் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் சில உத்தியோகத்தர்களை பணித்துள்ளேன். இது தொடர்பில்  தற்போது பரீசிலிக்கப்படுகின்றது. இதன் அறிக்கை எனக்கு அடுத்த வாரத்தில் கிடைக்கும்;.

இதற்கிடையில், ஆரம்பக்கட்ட அறிக்கையொன்று எனக்கு கிடைத்துள்ளது. அந்த ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி வசதியான மாடி வீடுகளில் வசிப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த சமுர்த்தி உணவு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரியவந்துள்ளது. தகுதியானவர்களுக்கும் வறுமையானவர்களுக்கும் இந்த நிவாரண முத்திரை கிடைக்கவேண்டும்.

வறுமையான மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த வாழ்வின் எழுச்சித் திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இத்திட்டம் விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை நேர்மையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும். சிந்தனைகளிலும், செயற்பாடுகளிலும் உத்தயோகத்தர்களிடையே மாற்றம் வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு அவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த வீட்டுத்திட்டத்தின் பயனாளிகளாக அரச உத்தியோகத்தர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்க வேண்டும்.

இந்த வீட்டுத்திட்டம் பற்றிய பரிசீலனையை மேற்கொள்வதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் எமது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களில் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளக கணக்காளர்களை நான் அனுப்பி உரிய பயனாளிகளின் ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு என்பவற்றை மேற்கொண்டு அந்த உத்தியோகத்தர்கள் என்னிடம் அறிக்கை ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு தகுதியற்றவர்களுக்கு இந்த வீடுகள் கிடைப்பதை அனுமதிக்க முடியாது. இதனை நெறிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மீனைக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பது மிகவும் சிறந்ததாகும் என சீனப்பழமொழியொன்று கூறுவதை இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.

நிவாரணங்களை இலவசமாக பெற்ற எமது மக்கள் அதே மனோநிலையிலேயே காணப்படுகின்றனர்.

இன்று நுண்கடன் திட்டம் ஒரு சவாலாக மாறியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நுண்கடன் வழங்கும் நிறுவனங்களும் சில லீசிங் நிறுவனங்களும் வழங்கும் நுண்கடன்களுக்கு 10 வீதம் தொடக்கம் 35 வீதம் வரை வட்டி அறவிடப்படுகின்றது. இதனால், இந்த குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இவ்வாறான நுண்கடன்களை பெறும் மக்கள் கல்வியறிவில்லாத, கடன் பற்றிய விளக்கங்கள் தெரியாத தொழில்நுட்ப அறிவில்லாத, பெறும் கடனை சரியாக பயன்படுத்தத் தெரியாத மக்களிடமே இவ்வாறான நுண்கடன் வழங்கும் நிறுவனங்களும் சில லீசிங் நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டத்தை  மேற்கொள்கின்றன.

ஒரு விவசாயி அல்லது ஒரு மீனவ குடும்பம் குறைந்தது ஒரு இலட்சம் ரூபா கடனிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. ஏதாவது பணம் கிடைத்தால் அந்த கடனை செலுத்துபவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர்.
 
இப்படியானவர்களை இதிலிருந்து மீட்பதற்காக நான் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் கதைத்துள்ளேன். அந்த வங்கியினால் இவர்களின் கடன்களை செலுத்தி குறைந்த வட்டி வீதத்திற்கு ஒரு தொகை பணத்தினையும் வழங்கி அவர்களுக்கு ஒரு தொழில் முயற்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இறைவனுக்குப் பயந்து மனச்சாட்சியுடன் செயற்படும் உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 63 புதிய கிராம உத்தியோகத்தர்கள் என பல்வேறு வகையான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டும் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை குறையவில்லை. 20.3 வீதமாக இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை 19.4 வீத்திற்கு மாறியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். 29,000 கணவனை இழந்த விதைவைகளையும்  15000 க்கும் மேற்பட்ட வலுவிழந்தோரையும் பல்வேறு வகையான நோயாளர்களையும்  கொண்ட இந்த மாவட்டத்தில் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .