2025 மே 10, சனிக்கிழமை

'அ.இ.ம.கா.வை வீட்டுச்சொத்தாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை, அதன்  தலைவர் ரிஷாத் பதியுதீன் தனது வீட்டுச்சொத்தாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபைர் தெரிவித்தார்.
 
ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை(16) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்களுக்கு அரசியல் யாப்பு தெரியாது. அவர் எவ்வாறு புதிய அரசியல் யாப்பு தொடர்பான தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும். அவர் கட்சியை தனது வீட்டுச் சொத்தாக பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார். அதற்கு ஒருபோதும் இஸ்லாமிய சகோதரர்கள் துணைபோகக்கூடாது.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசிலிருந்து வெளியேறிய போது 40 பிரதேச சபை உறுப்பினர்கள் 4 பிரதேச சபை தலைவர்கள், மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சேர்ந்திருந்த எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அங்கு  அமைச்சுப்பதவிகள் மற்றும்  தேசிய பட்டியல் பற்றி மாத்திரமே பேசப்பட்டன. சமூகத்தைப் பற்றி எதனையும் பேசவில்லை என்பதனால்  கட்சியின் செயலாளர் லை.எல்.எம்.ஹமீட் அதனைக்கேட்டார்.முரண்பாடு ஆரம்பித்தது.
 
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கிறார்கள். எத்தனை விதவைகள் வாழ்கிறார்கள், கரிமலையூற்று பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது, நுரைச்சோலையிலே கட்டப்பட்ட 500 வீடுகள் மூடிக்கிடக்கின்றன, காணிப்பிரச்சினை கிடப்பிலுள்ளது இதில் எதனைப்பற்றியும் பேசவில்லை.

அந்தப் பேச்சுவார்த்தையின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதைத் தவிர முஸ்லிம் சமூகத்துக்காக  எதனையும்  பெற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப்பதவியை அலங்கரித்தார். அவரின் அமைச்சின் கீழ் 37 திணைக்களங்கள் இருந்தன.இந்த ஏறாவூர் மண்ணுக்கு ஒரு தொழில் வாய்ப்பையேனும் வழங்கினாரா? என்றும் கேள்வியெழுப்பினார்.

இப்போது என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.நான் பரம்பரை அரசியல்வாதியுமல்ல. எனது அரசியல் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆனால், எனது உயிர் உள்ளவரை இக்கட்சியின் முக்கியஸ்தர்களின் தில்லுமுள்ளுகளை வெளிச்சொல்வதற்கு தயங்கமாட்டேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X