2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக உள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இக்காலப்பகுதியில்; ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின், அவை தொடர்பில் விசாரணை செய்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.எஸ்.அஸீஸ் தெரிவித்தார்.

'நீதிக்கான மாற்றத்துக்காகப் பரிந்துரைப்போம்' என்ற தொனிப்பொருளில் சிவில் சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 'சட்ட உதவிகள் மற்றும் அடிப்படை உரிமைகள்' என்ற தலைப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மக்கள் சுதந்திரமாக இன்று கருத்துத் தெரிவிக்கின்றனர். சுதந்திரமாக கருத்தினை தெரிவித்துவிட்டு வீட்டுக்கு செல்லக்கூடிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இன்று அச்சுறுத்தல்கள் குறைவடைந்துள்ளன.
மாற்றங்களுக்கான பரிந்துரைகள் சரியாக இருக்குமானால,; அடுத்த சந்ததியாவது உரிமையுடன் சுதந்திரமாக வாழும் நிலையை ஏற்படுத்தமுடியும் என்பதற்காக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டபோது அது தொடர்பில் பேசாதவர்கள், வாய்மூடி மௌனமாக இருந்தவர்கள், உரிமைக்கான சிறந்த தீர்வினை கூறாதவர்களிடம் ஏன் உரிமை தொடர்பாக பேசவில்லையென்ற கேள்வியை எழுப்பும் காலம் இதுவென சிலர் கூறுகின்றனர். கடந்த கால கசப்பான அனுபவத்தின் ஊடாக அனுபவ பகிர்வினை ஏற்படுத்தி ஒரு சமூகத்துக்கோ தனிமனிதனுக்கு அநியாயங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக சட்டமூலங்களை ஏற்படுத்தவேண்டும் என சிலர் கருதுகின்றனர்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. பரிகாரங்கள் தாருங்கள் என்று நாங்கள் காலம் கடந்த நிலையில் இன்று கோரிக்கொண்டு இருக்கின்றோம். கடந்த காலத்தில் இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதான தெட்டத்தெளிவாக பதியப்பட்டுள்ளது. எனினும் அதற்கான பரிகாரங்கள், முன்னேற்றங்கள் கேள்விக்குறியான நிலையிலேயே இன்னும் இருந்துவருகின்றது.

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் 10ஆவது உறுப்புரிமை மனித உரிமைகள் தொடர்பில் முக்கியமான உறுப்புரையாகவுள்ளது. சிந்தனை செய்வதற்கும் மனச்சாட்சியை பின்பற்றுவதற்கும் தங்களது சமயத்தினை பின்பற்றுவதற்குமான உரிமையுள்ளது.

சுதந்திரமாக தமது மதத்தினை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் உள்ளபோதிலும், தமிழர்கள் தங்களது கலாசாரத்தினை பின்பற்றமுடியாத நிலையிலான சூழல் இந்த நாட்டில் இருந்தது. முஸ்லிம்களின் ஆடையான பர்தா களட்டப்படவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடமாட முடியாதவாறு அனைத்து உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டன.
கலாசாரங்கள், பண்பாடுகள், சமய கடமைகள் பின்னப்பற்றப்படும்போது அதனை தடுப்பதற்காக ஒரு மேலாதிக்கம் மேலோங்கி நின்றது. அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இறைமையின் அடிப்படையில் இருந்திருக்கின்றதா என்ற கேள்வியை நாங்கள் இன்றும் கேட்டுக்கொண்டே உள்ளோம். கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு எதனை செய்தார்கள்.

அதனைக் கட்டுப்படுத்தினால் தம்மால் ஆட்சி அதிகாரத்தினை கொண்டுசெல்லமுடியாது என கூறினார்கள். அதன் பலாபலன்களையே நாங்கள் இன்று அனுபவித்து வருகின்றோம். ஒரு தனிமனிதனுக்கு ஒரு சமூகத்திற்கு இடம்பெற்ற அநீதியை தட்டிக்கேட்க முடியாமல் அல்ல நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெறமுடியாத அச்ச சூழ்நிலையில் இருந்துவந்த நாங்கள் இன்று நீதியின் மாற்றத்திற்கான பரிந்துரைகள் தொடர்பில் பேசிக்கொண்டுள்ளோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X