2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'அனைத்து நோய்களுக்கும் உரியவர்களாக மாறும் நிலையேற்படும்'

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தேக ஆரோக்கிய பயிற்சிகள் செய்யாத காரணத்தினால், உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் உரியவர்களாக மாறும் நிலையேற்படுவதாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற உடல்பயிற்சி வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இன்று நாடளாவிய ரீதியில் இந்த உடல் பயிற்சி வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இதன்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளகங்களிலும் இன்று காலை “விளையாட்டு ,உடல் ஆரோக்கிய வாரம்” எனும் தலைப்பில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் தேசியக்கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன்போது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ரி.பிரசாத்தினால் உடற்பயிற்சிகள் பிரதேச செயலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

அத்துடன் பிரதேச செயலக ஊழியர்கள் பங்குகொண்ட மரதன் ஓட்ட நிகழ்வும் நடைபெற்றதுடன் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசாங்க உத்தியோகத்தர்கள் அதிகளவில் தொற்றா நோய்களுக்குட்படுத்தப்படுவதன் காரணமாக இவ்வாறான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை சரியான முறையில் கடைப்பிடித்து சுகதேகியாக வாழவேண்டும்.

கிராமப்புறங்களில் சிறந்த உணவுப்பழக்கவழக்கங்களுக்குள் எந்தநோயும் எம்மிடம் ஏற்படுவதில்லை. ஆனால் நகர் புறங்களுக்கு நாங்கள் இடம்பெயர்ந்துவந்த நிலையில் இங்கு பல்வேறு நோய்களுக்குட்பட வேண்டிய நிலையேற்பட்டது.

வயலுக்கு சென்று வேலைகள் செய்து நடந்து திரிந்து அங்கு உணவு உண்டு வாழ்ந்துவந்தவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருந்தனர்.குறிப்பிட்ட காலத்தில் அந்த வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டபோது உணவுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டது.

அதன் காரணமாக பல நோய்களுக்கு உட்படவேண்டிய நிலையேற்பட்டது. உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் உரியவர்களாக நாங்கள் மாறிக்கொண்டு வருகின்றேம். இதற்கு முக்கிய காரணம் தேக ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை செய்வதில்லை. நல்ல உணவுகளை உண்பதில்லை.

எமது வயதுக்கு நாங்கள் தேக ஆரோக்கியம் இல்லாத நிலையிருந்துவருகின்றது.ஆனால் எமது குழந்தைகளையாவது தேக ஆரோக்கியம் உள்ளவர்களாக வளர்ப்பதில் ஆர்வம் செலுத்தவேண்டும்.

எமது பிள்ளையை நாங்கள் ஓடிவிளையாட அனுமதிப்பதில்லை.ஒய்ந்திருக்கவும் விடுவதில்லை.முன்பள்ளிக்கு செல்லும்போதே தனியார் வகுப்புகளுக்கு அழைத்துச்செல்லும் நாகரிகத்துக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X