2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் திறன்கள் வளர்க்கப்படல் வேண்டும்'

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

அனர்த்தம், அனர்த்தம் என நாம் அடிக்கடி பேசிவருகின்றோம். அனர்த்தம் என்றால் என்ன? அனர்த்தம் என்பது மக்கள் சொத்து அல்லது சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்வு. அத்தகைய நிகழ்வின்போது மக்களால் தாக்குப் பிடிக்கமுடியாத அளவுக்கு அழிவுகள், சேதங்கள் அல்லது இழப்புக்கள் ஏற்படும். இத்தகைய அழிவுகள் சேதங்கள் அல்லது இழப்புக்கள் மனித நடவடிக்கையினாலோ அல்லது இயற்கையினாலோ திடீரெனவோ அல்லது படிப்படியாகவோ ஏற்படுகின்றன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் உள்ள சர்வோதய பயிற்சி நிலையத்தில் மண்முனைமேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த ஆபத்துக் குறைப்பு மீள் நினைவூட்டல் பயிற்சியை நேற்று புதன்கிழமை (02) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்கள், சொத்து அல்லது சூழலை அபாயம் ஒன்று தாக்கும்போதுதான் அனர்த்தம் உருவாகிறது. ஆனால் சரியான முறையில் அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதனூடாக அழிவு, சேதம் அல்லது இழப்பை குறைக்கவோ அல்லது தணிக்கவோ முடியும்.

ஆகையால், கிராம மக்களிடையே அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் திறன்கள் வளர்க்கப்படல் வேண்டும். ஏனெனில் அனர்த்தத்துக்கு முகம் கொடுப்பவர்கள் அந்தந்த கிராமங்களில் வாழும் மக்களேயாவர்.

அனர்த்த முகாமைத்துவம் என்றால் என்ன? அபாயம் ஒன்று கிராமத்தைத் தாக்கும்போது ஏற்படக்கூடிய இழப்புக்களை அல்லது பாதிப்புக்களை எவ்வாறு குறைத்துக் கொள்ளலாம் அல்லது தடுத்துக் கொள்ளலாம் என்பதற்கேற்ற செயற்பாடுகளை தீர்மானித்து, அச்செயற்பாடுகளை எவ்வாறு செய்வது என திட்டமிட்டு, திட்டமிட்டபடியே அவற்றை செயற்படுத்தி, கண்காணித்து மீளாய்வு செய்யும் ஒரு படிமுறையான செயற்பாடே அனர்த்த முகாமைத்துவம் ஆகும்.

எனவே, கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் இத்தகைய படிமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

அதனாலேயே, கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் ஒக்ஸ்பாம் மற்றும் மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம், போன்றோரின், ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X