2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘அரச அலுவலகங்களில் கட்டாயச் சிரமதானம்’

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“கிழக்கு மாகாணத்தில் பரவிவரும் டெங்கு நுளம்பின் தாக்கத்தை இல்லாதொழிப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும், வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும், தலா இரண்டு மணித்தியாலங்கள் முழுமையான சிரமதானத்தில் ஈடுபட வேண்டும்” என்று கி​ழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், “கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்துக்கு அடுத்த நிலையில் டெங்கு எச்சரிக்கைப் பிரதேசமாக, மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

டெங்கு நுளம்பை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல், கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில், ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பூங்காவில், நேற்று இரவு இடம்பெற்றது.

இங்கு  தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

“வைத்தியசாலைகளைத் தவிர, ஏனைய அரச அலுவலகங்களில், திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள், முழுமையான சிரமதானங்கள் செய்யப்பட வேண்டும் என்று, மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

"இந்த உத்தரவு, டெங்கு அபாயம் தணியும் வரை, கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

"டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்போர் மீது, பாரபட்சமின்றி  சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நான், உள்ளூராட்சித் திணைக்களங்களை அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனவரியிலிருந்து டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்த வண்ணமே காணப்படுவதை, வைத்தியசாலைத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

"மார்ச் மாதத்தில், கடந்த இரு வாரங்களுக்குள் மட்டக்களப்பு நகரத்தில் 119 பேர், களுவாஞ்சிக்குடியில் 65 பேர், ஏறாவூரில் 77 பேர் என்று, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

"மட்டக்களப்பில் மாவட்டத்தில் செங்கலடி, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ஆகிய இடங்களில், தலா ஒரு மரணம் என்ற அடிப்படையில் இதுவரை 3 மரணங்கள் சம்பவித்துள்ளன.

"மேலும் அதிதீவிர கண்காணிப்பில் இருவர் என்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளனர்.

"1,219 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

"ஏறாவூரும், கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட வேண்டிய பிரதேசமாக உள்ளது.

"ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள மிச்நகர் கிராமத்தில் மாத்திரம், இதுவரை 148 பேர், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது, ஓர் எச்சரிக்கையை உணர்த்தி நிற்கிறது.

"மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று உட்பட எல்லா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும், டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்றது” எனத் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .