2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அரசியல் அபிலாஷைகளை அழுத்திக் கூறவே எழுக தமிழ் நிகழ்வு'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்,வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜெனீவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் காட்டப்படுப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் வட கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை இலங்கை அரசுக்கும் சர்வதேவத்திற்கும் குரல் எழுப்பி அழுத்தி கூறவே மட்டக்களப்பு  எழுக தமிழ் நிகழ்வு என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ.வசந்தராசா  தெரிவித்தார்

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையினால்  எதிர்வரும் 21ம் திகதி நடத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக நேற்று வியாழக்கிழமை(05) மாலை மட்டக்களப்பு புகையிரத வீதியிலுள்ள கூட்டுறவு சங்க கட்டிட மண்டபத்தல் பத்திரிகையாளர் மகாநாடு இடம்பெற்றது

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு. இது ஓர் அரசியல் கட்சியுமல்ல. தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணமும் அதற்கு இல்லை. எழுக தமிழ் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல. அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் அவர்களது நலனுக்காகவும் ஜனநாயக ரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்
அதன் அடிப்படையில் கடந்த புரட்டாதி 24 அன்று வடக்கில் யாழ்ப்பாணத்திலே எழுக தமிழ் நிகழ்வை முதன் முதலாக நடாத்தப்பட்டது அதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது அபிலாஷைகளை உலகிற்கு உரத்துக் கூறினர்

கடந்த காலங்களில் தங்களது பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளை தங்களது தலைவர்கள்தான்  சம்பத்தப்பட்டோரிடம் எடுத்தச் சொல்லவேண்டும் என்றும் அவை  நிறைவேற்றப்படவேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது அந்த நிலைமை மாறிக்கொண்டுவருகின்றது

இதுவரை காலமும் தலைமைகளுக்கு பின்னே தான் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் முன்னேபோக தலைமைகள் பின்னே செல்லவேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே தான் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பை செய்யவேண்டும் என மக்கள் முன்வரத் துவங்கியதன் வெளிப்பாடுதான்  தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் எழுக தமிழ் நிகழ்வும.;
இந்த எழுக தமிழ் நிகழ்வின் ஊடாக வடகிழக்கு இணைக்கப்படவேண்டும், தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ளக் கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும், வடகிழக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்களும்; நிறுத்தப்பட வேண்டும், போர் குற்ற விசாரணை சர்வதேச பொறிமுறையினூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும், விசாரணையின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கம் அரசியல் கைதிகள் காலதாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு முடிவொன்று விரைந்து காணப்படல் வேண்டும்,

போரின் விளைவாக உருவான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான தகுந்த வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களுக்கு சமனாக வடகிழக்கிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள மேற்கொள்ளப்படல் வேண்டும், வட கிழக்கிலுள்ள உயர் கல்வி நிலையங்களில் பிறரின் ஆதிக்கம் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பவற்றை  அரசுக்கும் சர்வதேசத்திற்கும் வடகிழக்கு மக்கள் அழுத்திக் கூற வேண்டியுள்ளது

கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை. கேட்பது எமது தலையாய கடமை, எங்களுக்கு எது தேவை என்பதை நாம் தான் சொல்லியாக வேண்டும். அதை உரத்துச் சொல்லுதல் வேண்டும். எங்கள் தேவையை  உலகறியச் செய்யவேண்டும் என்ற 11 கோரிக்கைகளை முன்வைத்து  இந்த 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி மட்டக்களப்பில் நடாத்தவுள்ளோம்'' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X