2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

“அரசியல் இலாபத்துக்காக மக்கள் மத்தியில் சேவைசெய்யக் கூடாது”

Gavitha   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பிப்பிள்ளை தவக்குமார்

“களுதாவளையில் அமையவிருக்கின்ற பொருளாதார மத்திய நிலையம் எந்தவித அரசியல் நோக்கத்திற்கோ, சுயநலத்திற்கோ அமைக்கப்படவில்லை. இந்த நிலையம்,  படுவான்கரையினை மையப்படுத்தி, அனைத்து விவசாயிகள், தோட்ட செய்கையாளர்களின் நன்மை கருதியே, அமைக்கப்படவிருக்கின்றது”  என்று, ஐக்கிய தேசிய கட்சியின், பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி, இன்று (01) தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகள் சம்மந்தமான கலந்துரையாடலின் போதே,  ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“படுவான்கரைப்பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக, தோட்ட செய்கையாளர்கள்,  அவர்களின் முயற்சியினால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விதமான மரக்கறி வகைகளை, சந்தைப்படுத்தும் வசதிகள் இல்லாமையால், அவர்கள் மிக நீண்ட தூரம் பயணித்து வேறு மாவட்டங்களில் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு, அனைவரும் பயன் பெறக்கூடிய வகையில், இந்த பொருளாதார மத்திய நிலையத்தை, களுதாவளை பிரதேசத்தில் அமைப்பதற்கு அமைச்சின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது” என கூறினார்.

“எங்களது மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவையறிந்து, நாங்கள் மக்கள் மத்தியில் சேவை செய்யவேண்டும். அதனை விட்டுவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த நிலையம் அமைவதற்கு தடையாக உள்ளனர்.  அவர்களில் ஒருவர் கூட, மாவட்டத்தின் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டு, எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் இருக்கின்றனர். கடந்த காலத்தில், தான் பிரதியமைச்சராக இருந்த போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தாளங்குடாவில் கல்வியற்கல்லூரி அமைவதற்கு, கல்வியமைச்சின் அனுமதி கிடைத்திருந்தபோதும் அதனை தடுத்துநிறுத்தி, சத்துறுக்கொண்டானில் அமைப்பதற்கு, ஒரு சில அரசியில் வாதிகள் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக, வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போதும்,  தனது முயற்சியினால் தாளங்குடாவில் அமைக்கப்பட்டது.

“விரைவில் களுதாவளையில் அமைக்கப்படவிருக்கின்ற சகல வசதிகளும் கொண்ட பொருளாதார மத்திய நிலையத்தினைப் போன்று, கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகின்ற படுவான்கரை மக்களின் தேவைகருதி, சகல வசதிகளும் கொணட வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்தாகவும் இவ்விடயம் சம்மந்தமாக உரிய அமைச்சி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம்” என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .