2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'அரசியல்வாதிகள் ஒன்றுபடாதவரை அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படாதவரை இப்பிரதேசத்தின் அபிவிருத்தி கனவாகும் சாத்தியமுள்ளதாக சமூக வலுவூட்டலுக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பின் ஏறாவூருக்கான பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'ஏறாவூர் பிரதேச அரசியல்வாதிகள் பொதுவாக அரசியல் அந்தஸ்தில் உச்ச நிலையில் இருந்தபோதும், அவர்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது எட்டாக் கனியாக இருந்து வருகின்றது. இதனால், இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஏறாவூரில் ஒரு பொதுச் சந்தை, பொது மண்டபம், பொது விளையாட்டு மைதானம், பஸ் நிலையம், குறைந்த பட்சம் மழைக்கு ஒதுங்க பஸ் தரிப்பிடங்கள் கூட இல்லை. ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான சந்தைக் கட்டடத்தொகுதி காடுமண்டிக் கிடக்கிறது. புதிய நகர சபைக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட கட்டட வேலைகள் இன்னமும் முடிவுறாத நிலையில் இருக்கிறது. ஏறாவூரில் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை.

ஏறாவூர் முஸ்லிம் கிராமங்களின் நிர்வாக அலுவல்கள் சிதறுண்டு கிடப்பதால், இப்பிரதேச மக்கள் காணி மற்றும் பரிபாலனப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

பொது நன்மை கருதிய விடங்களில் புரிந்துணர்வுடன் கூட்டுத் தீர்மானம் எடுக்கும் போக்கு இல்லாததால் ஒருவர் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை மற்றவர் மறைமுகமாக தடை செய்யும் அல்லது புறக்கணிக்கும் மனநிலை அவதானிக்கப்பட்டு வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இப்பிரதேச மக்களின் நன்மை கருதி இவ்வூர் அரசியல் முக்கியஸ்தர்கள் கருத்தொருமைப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X