Suganthini Ratnam / 2016 ஜூன் 12 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டி ஆட்சி அதிகாரங்களை பிடிக்க நினைப்பவர்களே, தற்போது அரசியலில் குழப்ப நிலைகளை ஏற்படுத்தி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதாரப் பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், '13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரப்பகிர்வு எனும் விடயத்தை வழங்கிவிட்டு, அதை அமுல்படுத்துவதில் பல சிக்கல் நிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளமையை அனைவரும் அறிவார்கள். அந்த அதிகாரப்பகிர்வுக்கு சமாந்தரமாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாத நிலையும் உள்ளது' என்றார்.
'மேலும், ஆயிரம் மில்லியன்களைத் தாண்டியதாக இதுவரையில் கிழக்கு மாகாண சபைக்கு நிதி ஒதுக்கீடுகள் வந்ததில்லை. ஆனால், இந்த ஆண்டு 4,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது மட்டுமன்றி, கிழக்கு மாகாண அமைச்சுகள் ஊடாக பாதைகளை புனரமைப்பதற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் கல்வி வளர்ச்சிக்காக 5,471 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் மாற்றம் வேண்டும் என்பதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவுறுத்தி ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுக்கொள்ளும் அனைத்து வழிவகைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
கிழக்கு மாகாண சபையில் இடம்பெறும் நிதி ஒதுக்கீடுகளில் எந்தவிதப் பிரச்சினையும் எழுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதைச் சரியாக பங்கிடப்பட வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. அதைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு உள்ளது' என்றார்.
'இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதில் ஜனாதிபதியும் பிரதமரும் இனவாதச் சக்திகளுக்கு அடிபணியாமல், இழுத்தடிப்புச் செய்யாமல் தேவையை உணர்ந்து செயற்பட வேண்டும். அதற்காகவே, சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்தார்கள். இந்த நாட்டில் இருந்த இனவாதச் சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025