2025 மே 10, சனிக்கிழமை

2020ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

 '2020ஆம் ஆண்டில் பெருமளவான சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையிலான திட்டங்களைத் தயாரித்து எமது அமைச்சு செயற்படுத்தி வருகின்றது. இதன் மூலம் அதிகளவான வெளிநாட்டு மூலதனம் கிடைக்கும்' என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்;தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

சுற்றுலா விடுதி உபசரிப்பாளர் பதவிக்கான பயிற்சிநெறி பாசிக்குடா காம் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதைய நல்லாட்சியில் சுற்றுலாத்துறையால் அதிக வருமானத்தைப பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாசிக்குடா சுற்றுலா மையம் உட்பட இலங்கையின் கரையோர சுற்றுலாப் பிரதேசங்களில் இதுவரையில் 600 சுற்றுலா விடுதிகளை நிர்மாணித்துள்ளோம்' என்றார்.

'இயற்கை வளங்களைக் கொண்ட எமது நாட்டின் இயற்கை அழகைக் கண்டுகளித்து பொழுதுபோக்குவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விடுதிகளை கட்டுவதில் மாத்திரம் தங்கியிராமல்,  அவர்களை சரியான முறையில் உபசரித்து பணிவிடை செய்யக்கூடிய பயிற்சியளிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்களும் தேவையாகவுள்ளனர்.

இளைஞர்கள் பெற்றோருக்கு பாரமாக இருக்காமல், தொழில் செய்யவேண்டிய நிலையிலுள்ளனர். இந்நிலையில், தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில் இப்பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலா விடுதி உபசரிப்பாளர் பதவிக்கான பயிற்சியை  வழங்குவதுடன், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளேன்.

சுற்றுலாத்துறை அமைச்சினால் இலவசமாக இரண்டு பயிற்சிநெறிகள் நடத்தப்படுவதுடன், ஒரு பயிற்சிக்காலம் ஒரு மாதத்தைக் கொண்டது. மற்றையது மூன்று மாதங்களைக் கொண்டதாகும். இந்தப் பயிற்சிநெறிகளை பூர்த்தி செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலா விடுதிகளில் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று  குறைந்த வருமானத்தைப் பெற்று கஷ்டப்படாமல், எமது பகுதியில் உங்களின் வீடுகளிலிருந்தவாறு தொழிலுக்குச்  செல்லவேண்டிய சூழ்நிலையை உருவாக்கவே சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X