2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இன முரண்பாடுகள் கூர்மையடையாதவாறு 'மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இனிமேலும் இன முரண்பாடுகள் கூர்மை அடைந்து செல்லாதவாறு, இந்த நாட்டில் வாழும் அனைவரும் அடுத்தவரின் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வ மதப் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடலும் செயலமர்வும் கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'எல்லோருக்கும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் சட்டவாட்சியை முன்னேற்றுவதையும் அதனைப் பாதுகாப்பதையும் நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தங்களது முழுமுதற் கடமையாகக் கொள்ள வேண்டும்.

எனக்குள்ள பசி, தாகம், களைப்பு, மகிழ்ச்சி, இது போன்று ஓய்வு, நிம்மதி, தூக்கம் ஆகிய இன்னும் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளும் அடுத்தவருக்கும் உண்டு. அடிப்படையில் இவற்றை மனிதாபிமானத்தோடு மதிக்கப்பழக வேண்டும்.
சமத்துவம் மற்றும் பாராபட்சமின்மைக்கான உரிமை, பேச்சு, மற்றும் ஒன்று கூடுவதற்கான உரிமை, சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் எல்லாமே அடுத்தவருக்கும் உண்டு.

அமைதிக்கான ஆத்ம ஈடேற்றமுள்ள வாழ்வுக்கு வழிகாட்டவே மதங்கள் உள்ளன. மத உணர்வுகள் மற்றவர்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது.

அதேவேளை, மற்ற மத அடிப்படை நம்பிக்கைகளிலும் சுதந்திரத்திலும் அடுத்தவர் அராஜகம் புரியக்கூடாது. மத சுதந்திரம் என்பது ஒரு உரிமை. அதனை மதிக்க வேண்டும்.

அடுத்தவரை அவமதிக்காமல் மதிக்கத் தொடங்கினால், அழிவுகளுக்குப் பதிலாக ஆக்கபூர்வமும் ஆனந்தமும் அபிவிருத்தியும் ஏற்படும்.

மனித முரண்பாடுகளால் சிறைச்சாலைகளுக்கும் காயம்பட்டு வைத்தியசாலைகளுக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

எமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதன் மூலம் வெற்றி வெற்றி என்ற தீர்வே கிட்டும். பிணக்குகளாலும் தொடரான முரண்பாடுகளினாலும் ஒரு நீதிமன்ற வழக்கு முடிவில் இன்னுமொரு வழக்கு ஆரம்பிக்க வாய்ப்புண்டு. இதனை வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான் என்ற கதை நமக்கு நினைவூட்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X