Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள். அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா காணாமல் போனோர் விசாரணை குழுவைச் சந்தித்த தாயார் இருவர் கதரியழுதவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று, மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து இருந்து காணாமல்போன சுமார் 600பேரின் உறவினர்கள் கலந்துகொண்டதுடன் தமது நிலையையும் எடுத்துக்கூறினர்.
காணாமல்போன தமது உறவிகளை கண்டுபிடிப்பதற்கு தங்களுக்கு உள்ள தற்போதைய ஒரே வழி ஐ.நா.வின் விசாரணை எனவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது நிலைமையினையும் தமது குழந்தைகளின் நிலைமையினையும் கருத்தில்கொண்டு தமது உறவுகள் காணாமல்போனமை தொடர்பில் உறுதியான பதிலை அரசாங்கம் வழங்கவேண்டும் எனவும் இங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு முன் ஆட்சியம் அளித்ததன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இராசப்பிள்ளை மரகதமனி என்பவர் கூறுகையில்,
2008.09.25 திகதி எனது மகனை முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளராக இருந்த இனியபாரதி என்பவர் பிடித்துச் சென்றார். பல தடவைகள் நான் அவரின் காலைப்பிடித்து மன்றாடி கேட்டும் எனது மகனை அவர் விடவில்லை.
இன்னும் எனது மகன் வீட்டுக்கு வரவில்லை. எனவே இனியபாரதியை கைது செய்து விசாரியுங்கள். அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென கூறினார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு தாயார் கருத்து தெரிவிக்கையில்,
இனியபாரதியின் தலைமையில் செயற்பட்ட பத்மநாதன் தயாபரன் என்பவரே எனது மகனை கொண்டு சென்றார். பின்னர் எனது மகன் எங்கே என்று கேட்டபோது எனது மகனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துவிட்டதாக சொன்னார் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெயர்ந்து இருந்த எங்களை பார்க்க வந்த எனது தம்பியுடன் 18 பேரைப்பிடித்த இராணுவ சீருடை தரித்தவர்கள் பஸ்ஸில் ஏற்றி செங்கலடி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர் என நேற்று மட்டக்களப்புக்கு வருகை தந்த ஐ.நா காணாமல்போனோர் விசாரணை குழுவைச் சந்தித்த உறவினர் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எனது தம்பியான முத்துசாமி ரவிந்திரன் என்பவர் கடந்த 1990அம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெயர்ந்து இருந்த எங்களை பார்க்க வந்தார்.
வந்தவழியில் தாக்குதல் ஒன்று நடைபெற்றதை தொடர்ந்து வீதியில் நின்ற எனது தம்பியுடன் 18 பேரைப்பிடித்த இராணுவ சீருடை தரித்த சிலர் பஸ்ஸில் ஏற்றி செங்கலடி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்றனர்.
பின்னால் கத்திக்கொண்டு ஓடிய என்னையும் எனது அம்மாவையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஓடச்சொல்லி சிங்களத்தினால் ஏசி துரத்திவிட்டனர். அதற்கு பின்னர் நாங்கள் பல இடங்களுக்கு அறிவித்தும் இன்றுவரை அவர் இருக்கின்றரா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை.
அவரைத் தேடி தேடி எனது அம்மா எட்டுவருடமாக படுத்த படுக்கையில் இருக்கின்றார். எனவே அவர் இருக்கின்றாரா இல்லையா என்பதை தெரிவியுங்கள் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago